றிசாத் ஏ காதர்-
முஸ்லிம் அரசியல் தலைமைமைகள் விடுகின்ற தவறுகளினாலே எமது சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியாமல் போயுள்ளதாகவும் இதனை முஸ்லிம் சமூகம் தற்போது உணர்ந்துள்ளதாகும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை ஏறாவூர் பிரதேச சமூக அமைப்புகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும்தெரிவிக்கையில்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தினுடைய நியாயபூர்வமான உரிமைகள் பேரினவாதிகளிடம் பகிரங்கப்படுத்தப்படும் போது அது தோல்விகாணச் செய்கின்ற நிகழ்வுகளையே ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே நாம் காணுகின்றோம். கடந்த காலங்களில் கரையோர மாவட்டம் பற்றிப் பேசிப்பேசி இன்று அந்த மாவட்டம் சம்மந்தமான விடயத்தை எந்த அரசாங்கத்தாலும் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தெளிவாகத் தெரிந்தும் எமது அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களிலே மாத்திரம் இந்த கரையோர மாவட்டத்தை ஒரு பேசு பொருளாக எடுத்துக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கை மாத்திரம் விடுவதனைப் பார்க்கின்றோம்.
அதே போன்றுதான் இன்று வடபுல முஸ்லிம்களுடைய பிரச்சினைகளும் இவ்வாறானதொரு நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு பேசு பொருளாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவைகள் யாவும் ஒரு தேர்தலை மையப்படுத்தி எடுக்கின்ற முன்னெடுப்புக்களாகும் தேர்தல் முடிந்தால் எமது சமூகப்பிரச்சினைகளை பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லை குறிப்பாக தம்புள்ளை பள்ளிவாசல், கிழக்கு காணிப்பிரச்சிணைகள், முஸ்லிம் சமூகத்தினுடைய கல்விப் பிரச்சினைகள் என்பவற்றை தீர்த்துக்கொள்வதற்கு நமது தலைமைகளினால் எந்த முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை இதனாலே அவைகள் வழுவிழந்து காணப்படுகின்றன.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்ச்சியில் நாம் எதைச்சாதித்தோம் என்று பார்க்கின்ற போது அது பூச்சியமாகவே காணப்படுகின்றது.
ஆனால் இன்று தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுடைய சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதில் தீர்க்கமானதொரு முடிவுகளை கையான்டு வெற்றிகண்டுகொண்டிருக்கின்றது. விசேடமாக எமது அயல்நாடான இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இல்லாமலாக்கி சம்பூர் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் என்கின்ற பேரினவாதிகளின் கோசத்துக்கு மத்தியிலும் கூட பல இரானுவ முகாம்களை அப்புரப்படுத்தி இரானுவத்தின் தேவைகளுக்காக கடந்த காலங்களில் பயன்படுத்திய காணிகளை மக்களின் தேவைகளுக்காக மீட்டுக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதைவிடவும் ஜெனீவாவில் புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினை தீர்வைப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதத்தினை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டது.
இவைகளைப பெற்றுக்கொள்வதில் தமிழ் அரசியல் தலைமைகள் பல சவால்களை எதிர்நோக்கியதே தவிர மேற்குறித்த விடயங்களைப் பேசிப்பேசி அரசியல் நடாத்தவில்லை அவர்கள் தூய்மையான எண்ணத்தோடு செயற்பட்டதனாலே வெற்றிகண்டார்கள்.
ஆனால் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை இலக்கு வைத்து வெற்றுக்கோசங்களை பேசிப்பேசி அரசியல் செய்வதனை பார்க்கின்றபோது மிகவும் கவலையளிக்கின்றது இதனை மக்கள் நன்குனர்ந்துள்ளார்கள். துற்போதைய காலகட்டத்தில் எமது தலைமைகள் தங்களுக்குள்ளே முட்டிமோதி சமூக வலயத்தளங்களில் மிகக்கேவலமாக ஒருவருக்கொருவர் விமர்சித்து எழுதுகின்ற நிலைமைகள் உருவாகியிருக்கின்றது.
எனவே எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய பொதுவான பிரச்சிணைகளை ஒரு முஸ்லிம் தலைமைத்துவ சபை மூலமோ அல்லது முஸ்லிம் பேரவை மூலமோ அடைந்துகொள்வதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




