அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் தனி அலுவலக அறைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 150 அறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளிலும், அவர்களுக்கான அலுவலகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர் ஊடாக தமது கோரிக்கைகளை கட்சித் தலைவர் கூட்டத்தில் முன்வைக்குமாறும், அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியை தான் பெற்றுத் தருவதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கப்படாமையினாலேயே அவர்கள் முறையற்ற விதத்தில் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இனிவரும் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
