மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் கனடா படைப்பாளிகள் உலகமும் இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இலக்கியச் சந்திப்புடனான விருதுவழங்கும் நிகழ்வில் இலக்கிய மதிப்பீட்டாளரும் ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு ”சிறந்த இளம் இலக்கிய விமர்சகர்” விருது வழங்கப்படவுள்ளது
இன்று (15) திருகோணமலை சன்சினே மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி- விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம் ஆகியோருடன் மலேசிய- கனடா எழுத்தாளர்கள் பலரும் அதிதிகளாக்க் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
இலங்கை-மலேசிய-கனடா எழுத்திலக்கிய காரர்கள் 42 பேர் கௌரவம் பெறும் இந்நிகழ்வில் மருதமுனையைச் சேர்ந்த ஜெஸ்மி மூஸா விருது பெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்
ஜெஸ்மி எம். மூஸா இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல்யமான பத்திரிகைகள் மற்றும் தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளின் பிராந்திய ஊடகவியலாளராகக் கடமையாற்றுவதுடன் அலிஸ் ஊடக வலையமைப்பின் பிரதம நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தழிழ் விசேட துறைப் பட்டம் பெற்று சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் தமிழ்ப்பாட ஆசிரியராக பணிபுரியும் இவர் தமிழியல் துறையில் முதுகலைமாணியைப் பூர்த்தி செய்துள்ளதுடன் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ”ஈழத்து சிறுகதைகள்” தொடர்பிலான தனியாள் விரிவாக்க ஆய்வினை முதுகலை தத்துவ மாணிக்காக மேற்கொண்டு வருகின்றார்
இலக்கியத்தில் கல்முனைப் பிரதேச தமிழ்- முஸ்லிம் உறவு, கல்முனைப் பிரதேச போர் சூழல் கவிதைகள், இஸ்லாமிய இலக்கியப் பண்புகளின் கட்டுடைப்பு ஆகிய தலைப்புக்களில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
நாகம்மாள் ஒரு பார்வை, திருக்குறளின் அங்கவியல் தெளிவுரை, தேடலின் ஒரு பக்கம்- ஆய்வியல் நோக்கு, தமிழ் இலக்கிய வினாவிடைத் தொகுதி ஆகிய நான்கு நுால்களின் சொந்தக்காரர்.
தினகரன் வார மஞ்சரி- தினக்குரல்- எங்கள் தேசம்- விடிவெள்ளி- நவமணி பத்திரிகைகளில் இலக்கியம் மற்றும் சமூகவியல் சார்ந்த பல நுற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ள இவர் பல்கலைக்கழக காலம் முதல் மேடை இலக்கிய விமர்சனங்களையும் செய்து வருகிறார்
ஒலுவில் ஜலால்தீனின் ”சுடுகின்ற மலர்கள்” (குறும்பா)- நவாஸ் சௌபியின் ”மண்ணில் வேரானாய்” (கவிதை)- அப்துல் றசாக்கின் ”வாக்குமூலம்” (நாவல்)- பஸீல் காரியப்பரின் ”ஆத்மாவின் அலைகள்” (கவிதை)- டீன் கபூரின் திண்ணைக் கவிதைகள்- றஹ்மான் ஏ.ஜெமீலின் ”தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்- மருதமுனை மஜீதின் “எனது கிராமத்தைத் தேடுகிறேன்” -கொத்தன் கதைகள்- மேல்நீதிமன்ற ஆணையாளரான ஜெமீலுக்கான ”வெண்முத்து” (சஞ்சிகை) ஜனுஸின் “பெத்தம்மா” (குறும்படம்)- ஜெலீல் ஜீ இன் ”பட்டிப்பளை” சப்னா அமீனின் ”நிலாச்சோறு” (கவிதை) திருமலை அஸ்ரபின் ”மகாகவியும் நீலாவணனும்” (ஒப்பியல்)-கிண்ணியா அமீர் அலியின் ”மனையாளும் மறுபதிப்பும்” அன்புடீனின் “நெருப்பு வாசல்”- செட்டிப்பாளையம் சபாவின் ”இப்படிக்கு இதயம்”-கிராமத்தான் கலிபாவின் ”நிறம் பூசும் குழந்தைகள்” (கவிதை) உள்ளிட்ட 100க்கணக்கான வெளியீடுகளுக்கு மதிப்பீட்டு உரைகளைச் செய்துள்ளார்.
இலக்கிய மதிப்பீட்டாளராக நூலாய்வு மற்றும் விமர்சனங்களை எழுதியும் பேசியும் வரும் இவர் நமது பிரதேசத்தில் இடம்பெறும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளின் பேச்சாளராகவும் செயற்பட்டுவருகிறார்.
அலிஸ்பா அட்வடைசிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான இவர் தென்றல் வெளியீட்டுப் பணிப்பகத்தின் மேலாளருமாவார்.
