உலகக் கல்வியுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்லாமிய ஆன்மீக மார்க்கக் கல்வியையும் கட்டாயம் ஒவ்வொரு மாணவர்களும் கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் ஒழுக்க மாண்புகள் பேணப்படும். இம்மைக்கும் மறுமைக்குமான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
அதேவேளை நான் படித்த பாடசாலை என்ற அடிப்படையில் பாரியளவிலான கேட்கோர் கூடம் ஒன்றை என்னுடைய காலத்தில் செய்து தருவேன் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா திங்கட் கிழமை 30-11-2015 பாடசாலையின் கேட்பார் கூடத்தில் அதிபர் எம். எஸ். எம். இக்பால் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
அக்குரணை அஸ்ஹர் பாடசாலை இலங்கையில் ஒரு தலைசிறந்த கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கியுள்ள பாடசாலை எனப்தை எவரும் மறந்து விட முடியாது. இத்தகைய உயர் சிறப்புமிக்க புகழை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும். இதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கூறுக் கொள்ளவிரும்புகின்றேன்.
இங்குள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் முக்கிய பங்களிப்புச் செய்ய வேண்டும். எந்தப் பாடசாலையாக இருந்தாலும் சரி பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே அப்பாடசாலைகள் மென்மேலும் வளர்ச்சியையும் அபிவிருத்திiயும் அடையும். எனவே எமது பாடசாலையின் வளாச்சிக்கு பெற்றோர் முதல் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானதாகும்.
இன்று உலகம் மிக வேகமாக வளர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். இதற்கேற்ப தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகின்றன. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி இன்று வெகுவேகமாக வளர்ந்து செல்லும் துறையாக உள்ளன. விசேடமாக கற்றல் கற்பித்தல் என்ற செயற்பாடுகள் அதற்கு ஏற்ப சீராக அமைய வேண்டுமே அன்றி இது வேறுபட்ட வகையில் அமையக் கூடாது என நான் விசேடமாக வேண்டிக் கொள்கின்றேன். இந்த தொழில் நுட்ப விடயத்தில் நல்ல விடயங்களும் உள்ளன. கெட்ட விடயங்களும் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து இந்த மாணவர்கள் செயற்படுதல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சியாம்டீன் பவுன்டேசன் அமைப்பின் தவிசாளர் கலாநிதி எஸ்.எச். எம். சியாம்டீன் உரையாற்றுகையில்
பொது விடயங்களில் உதவியாக இருக்கக் கூடிய அமைப்புக்களில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் கூடுதலாக இருக்கக் கூடிய குறைபாடுதான் ஒருவர் அல்லது ஒரு குழு அவர்களைப் பார்த்து குறை சொல்லும் போது உண்மையிலே அதில் குறைபாடுகள் இருந்தால் கூட அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதில்லை.
ஆயினும் ஆசியா நாடுகளில் ஒன்றான யப்பான் நாட்டை உதாரணமாக கூறுவதெனில் குறையே இல்லாத போதிலும் யாரோனும் விமர்சனம் செய்தால் அதற்குக் கூட மன்னிப்புக் கேட்டு அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள் என்று சியாம்டீன் பவுன்டீடசன் அமைப்பின் தவிசாளர் கலாநிதி எஸ். எச். எம். சியாம்டீன் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
வருடாந்தம் நடைபெறக் கூடிய பரிசளிப்பு விழா என்பது பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரையில் அதி முக்கியமான ஒரு நிகழ்வாகும். ஏனெனில் ஆசிரியர் பெற்றோர்கள் மாணவர்களை மேடையேற்றி பரிசில்கள் வழங்கும் போது கை தட்டிப் பாராட்டும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கை எனும் தைரியம் வாழ்க்கையில் உருவாக இதுவொரு வாய்ப்பாக அமையும்.
எந்தவொரு சமுதாயத்தில் ஆசிரியர்கள் பெற்றார்களாகவும் பெற்றார்கள் ஆசிரியர்களாகவும் மாறுகின்றார்களோ அந்த சமுதாயம் தலை நிமிர்ந்து மேலோங்கி நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆசிரியர்கள் பெற்றார்களாக மாற வேண்டும் எனில் ஆசிரியர்களின் மனதை மாணவர்களும் பெற்றார்களும் வென்றெடுக்க வேண்டும்.
அதற்காக குறைந்த பட்ச முயற்சியாக ஆசிரியர்களுக்கோ அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கோ சகவீனமுற்றததாக கேள்விபட்டால் அவர்களிடம் சென்று நலம் விசாரிப்பதையாவது நாம் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கட்டுகஸ்தோட்டை கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. எல். எம். ஹியான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.





