பைரூஸ்-
இம்முறை நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட எனது வெற்றிக்காக பலதரப்பட்ட தரப்புகளிலுமிருந்து அனேகமானோர் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தீர்கள்.
அந்த வகையில், நான் வெற்றி பெற வேண்டுமென நினைத்து அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் கல்குடாத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட றணீஸ் இஸ்மாயீல் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அத்துடன், சிறப்பானதொரு தேர்தலை நடாத்தி முடித்த அரசுக்கும், இத்தேர்தல் பணியில் சிறப்புடன் செயற்பட்ட இளைஞர் சேவை மன்றப்பணிப்பாளர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும், வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அத்தனை இளைஞர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். அத்துடன், என்னுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற சகலருக்கும் இன, மத பேதங்களுக்கப்பால் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், இத்தேர்தலில் எம்மத்தியில் ஒரு முழுமையான ஒற்றுமையின்மை காரணமாகவே நாம் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம் என நான் உணர்கிறேன். இறைவன் குர்ஆனிலே “அனைவரும் அல்லாஹ்வின் (ஒற்றுமை) கையிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்’ எனக்கூறுகின்றான். ஆனால், நாம் அந்த ஒற்றுமையினைக் கடைப்பிடிக்காது, பிரதேசவாதம் மற்றும் பக்கச்சார்பு அரசியல் ஆதரவாளர் போன்ற பல விடயங்களைக் கொண்டு எமக்குள் ஒற்றுமையின்றி பிளவுபட்டமையால் இத்தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றோம்.
இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் இளைஞர்களின் திறமைகளை வளர்த்து, சிறந்த சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கழகங்கள் அதன் நோக்கங்களை அடைந்து கொள்ள வேண்டுமே தவிர, அரசியலுக்காக ஒரு போதும் கொள்கைகளிலிருந்து விலகி விடக்கூடாது என்பதோடு, இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு சகலரும் தங்களால் முடியுமான உதவிகளை வழங்க வேண்டும்.
மேலும், எம்மில் பலர் சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னரே ஆலோசனைகளை வழங்குகின்றனர். அவ்வாறில்லாமல், இளைஞர்களுக்கு சமூகத்த்திலுள்ளோர் முன் ஆலோசனைகளை வழங்கி அவர்களை வழி நடாத்த முன் வர வேண்டும் என்ற பணிவான வேண்டுகோளையும் இத்தருணத்தில் முன் வைக்க ஆசைப்படுகின்றேன்.
எனவே, இவ்வாறான பிழைகளை இனி வருங்காலங்களில் தவிர்த்து, சிறந்த இளைஞர் சமுதாயமொன்றை உருவாக்க நாமனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அதில் தெறிவித்துள்ளார்
