எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
கடமைக்கு பங்கம் விளைவித்தமையும் தங்களுக்கான சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனவும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று காலை 8.30 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் 11.30 மணியுடன் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
கடந்த திங்கட் கிழமை விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை அவசரமாக இடமாற்றம் செய்யவில்லையென கடமையிலிருந்த வைத்தியர்கள சில நபர்கள் வைத்தியசாலை வளாகத்தினுள் அடாவடித்தனம் புரிந்ததுடன் வைத்தியர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து இன்று இடம்பெற்ற அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் பள்ளிவாயல் சம்மேளனம், பொலிஸார் மற்றும் பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கிடையில் இடம்பெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் பிற்பாடு கைவிடப்பட்டது. ஒரு வார காலத்தினுள் நடவடிக்கை எடுக்கா விடின் எதிர்வரும் 2015.11.20ம் திகதி வெள்ளிக்கிழமை தொடரந்து வேலை நிறுத்தம் தொடரப்படும் என அரசாங்க வைத்திய உத்தியோகத்தர்கள் ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
ஒரு வார காலத்தினுள் குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஏ.எம்.இஸ்ஸதீன், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், உலமா சபைத் தலைவர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜீ.வசந்தகுமார், அரசாங்க வைத்திய உத்தியோகத்தர்கள் ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகள், மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






