ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர், அட்டப்பள்ளம் அஸ்-சஹிதா வித்தியாலய மாணவர்களின் பெருந் தேவைகளில் ஒன்றாக இருந்து வந்த 'காசிமியா' நூலகக் கட்டிடத் திறப்பு விழா இன்று சஹிதா வித்தியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.எம்.அன்வர் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.அன்சார் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
'பிரதியமைச்சர் பைசால் காசீமின்; ரூபாய்.10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், அவரின் தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இக் 'காசிமியா' நூலகத்தினால் இப்பிரதேசத்திலுள்ள பல்லாயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் நன்மையடையவுள்ளனர்'என்று வித்தியாலய அதிபர் அன்வர் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு பேசுகையில் ' இப்பிரதேச பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்கத் தொழிலுக்கு அனுப்ப விரும்பினால், அவர்களை கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரப்) பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியெய்த வைக்க வேண்டும். இல்லையேல் அரச தொழிலுக்குள் நுளைய முடியாது' எனத் தெரிவித்தார்.




