செய்தியாளர்- ந.குகதர்சன்-
கிழக்கு மாகாணத்தின் அதிகாரம் யாரும் கேள்விக்கு உட்படுத்துவதற்கு முதலமைச்சர் என்ற ரீதியில் எந்த ஒரு நிலையிலும் நான் அனுமதிக்கப்போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான மருந்து களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கிழக்கு மாகாண முதலமைச்சர் மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லா அரசாங்க கட்டிடங்களையும் திறப்பதற்கு தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று இராஜங்க அமைச்சர் ஒருவர் சொல்லியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு பின்னர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் வந்தவர்கள் கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்தில் தலையிடுவது கவலைக்குறியது.
அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்து தனது முயற்சியால் அல்லது தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஒரு அரச கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டோம் என்பதற்காக அது என்னுடைய சொந்தமான கட்டிடம் என்றும் அதற்கு தன்னுடைய பெயரைத்தான் வைக்க வேண்டும் என்றும் கூறும் அரசியல்வாதிகள் உள்ளனர் அதிலும் குறிப்பாக எமது மாவட்டத்தில் உள்ளனர். அவ்வாரு அரச சொத்துக்களுக்கு தனது பெயரை வைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.நஸீர், விவசாய அமைச்சர் கி.துரைராசிங்கம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மு.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.மு.முருகானந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள மருந்து களஞ்சியசாலைக்கு இருபது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

