ஜெம்சித் அஸீஸ் -
கோட்டே நாக விகாரையின் தலைமைப் பிக்கு மாதுளுவாவே சோபித தேரர் அவர்களின் மறைவு குறித்து இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கை ஜனநாயகத்திற்கு மீளத் திரும்ப வேண்டியிருந்த காலப்பகுதியில் சோபித தேரரின் செயற்பாடுகள்சிவில் அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய துணிச்சலைக் கொடுத்தது எனலாம்.
ஜனநாயக விழுமியங்களுக்குள் உண்மையான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக முன்வந்த சோபித தேரர் அவர்கள் அதற்குத் தலைமை தாங்கி ஏனைய சிவில் அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து ஈடுபட்டதன் விளைவாக,இன்று நாம் பல நல்ல விளைவுகளை அனுபவிக்கிறோம். சோபித தேரர் அவர்களுக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம் அவர் கனவு கண்ட நல்லாட்சி விழுமியங்களை இந்த நாட்டில் நிலை நிறுத்துவதற்கு சகல பேதங்களையும் மறந்து ஒத்துழைப்பதாகும்.
அண்மைக்கால வரலாற்றில் இலங்கைச் சிறுபான்மை மக்கள் குறித்து அதிகம் கரிசனை கொண்ட ஒரு தலைவராகவும் சோபித தேரர் விளங்கினார்.
அவர் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மக்கள் சக்தியையும் மையப்படுத்தி முன்னெடுத்த போராட்டத்தில் சிறுபான்மையினரும் இந்த நாட்டின் பிரஜைகளே என்ற நிலையை தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஏற்படுத்தியமை மிக முக்கியமானதொன்றாகும்.