நாட்டில் பொதுத்தேர்தல் ஒன்று முடிவடைந்து தேசிய அரசு என்ற கோட்பாட்டுக்குள் அமைச்சுப் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் நமது முஸ்லிம் கட்சிகள் தங்களது ஏற்றத்தாழ்வுகளை சுய பரீசீலணைக்கு உட்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை சரியாக உற்று நோக்கின் றிசாத் பதுர்த்தீன் தலமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது அமோக வெற்றி அடைந்து குறிகிய காலத்துக்குள் 05 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கிடைத்த இந்த வெற்றியினை 30 வருடங்கள் பழமை வாய்ந்த முஸ்லிம் காங்கிரசோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அரசியல் அவதானிகள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தினையும் அவதானத்தினையும் பெற்றுள்ளது.
பாராளுமன்ற வரலாற்றில் முயல் கொம்பாக இருந்த அநுராதபுர மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைக் கூட பெற்றுக்கொடுத்த பெருமை றிசாத் பதுத்தீனுக்கு கிடைத்துள்ளது.
இம்முறை றிசாத்துக்கு கிடைத்த அமோக ஆதரவும், ஆசனங்களும், அவரை ஒரு தேசிய தலமையாக அடையாளப்படுத்தி அங்கீகரித்துள்ளது.
இந்த அங்கீகாரத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது சுமார் 33000 வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஒரு ஆசனம் இல்லாமல் போய்விட்டது.
இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஏற்பட்ட தோல்வி என்பதனை விடவும் ஒரு சின்ன சறுக்கல் என்றே கூற வேண்டும். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த வாக்கில் பாரிய சந்தேகம் உள்ளதாக பல அரசியல் அவதானிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் 65மூ என குறித்துரைக்கப்பட்டிருந்ததான வாக்குப் பதிவு எவ்வாறு 74மூ பதீவிடப்பட்டது என்ற கேள்வி இன்னும் குழப்பகரமானதாகவே உள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் அப்போதைய செயலாளர் நாயகம் கூட தாங்கள் நீதி மன்றத்தினை நாடப்போவதாக கூறியிருந்தார்.
எது எவ்வாறாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அவதானிகள் கூறுகின்றார்கள். தயா கமகே போட்ட வாக்குப் பிச்சையினாலேயே முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது என்று,
இதனை சற்று உற்று நோக்கினால் ஐக்கிய தேசியக்கட்சி மாவட்டத்தில் நிறுத்திய இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களான சட்டத்தரணி றசாக், தொழிலதிபர் ஆதம்லெவ்வை (லேயிட்ஸ்) மற்றும் தமிழ் வேட்பாளராக களமிறங்கியிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுவர்ணராஜ் ஆகியோர் சுமார் 35000 மேற்பட்ட முஸ்லிம் தமிழ் வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெற்றுக்கொடுத்தனர். இதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியில் நான்காவதாக தெரிவு செய்யப்பட்டவராக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் வெற்றியீட்ட முடிந்தது.
இதனையே முஸ்லிம் காங்கிரஸ் தயா கமகேயின் வாக்குப் பிச்சையினாலேயே 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது எனச் சொல்லப்படுகின்றது.
இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸானது அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த 3 ஆசனங்களுக்கான மகிழ்ச்சியினை விடவும் மயிலுக்கு கிடைத்த 33000 வாக்குகளை நினைத்து நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மயில் ஆடிய ஆட்டத்தினால் முஸ்லிம் காங்கிரஸீன் தலைகளில் பாரிய சுமைகள் ஏற்றி விடப்பட்டுள்ளன. மயிலின் இறகுகளை உடைத்துப் போடுவதில் முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் அவதானமாகவுள்ளது.
இதன் உச்ச கட்ட நிலமை அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு உள்ளது என்றால் றிசாத் அம்பாறைக்கு வருவதாக இருந்தால் அந்த தினத்தில் ஹக்கீமும் வந்து விடுகின்றார்.
இது தொடர்பில் றிசாத் கருத்துத் தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்துக்கு எங்களது கட்சி விரிவாக்கப்பட்டுள்ளதால் இன்று மக்கள் விழிப்படைந்துள்ளனர். இதனால் முஸ்லிம் காங்கிரஸீற்காரர்கள் மக்களின் குறைகளை தீர்த்து வைக்க முண்டியடிக்கின்றனர். இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என கூறியிருந்தார்.
கீரைக்கடைக்கும் ஓர் எதிர்க்கடை இருந்தால் தான் வியாபாரமும் நன்றாக இருக்கும் நியாயமான விலையில் தரமான பொருட்களை வாங்கவும் முடியும். இந்நிலையே இன்று அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு மாவட்டத்தில் இன்னும் செல்வாக்கினை அதிகரிப்பதற்கான வாய்ப்பினையே ஏற்படுத்தி வருகின்றது.
இத் தேர்தலில் 65மூ வாக்குப்பதிவு சரியாக இருந்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சி 120000 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 25000 வாக்குகளுக்கே ஆசனம் கிடைக்கப்பெற்றிருக்கும்.
25000 வாக்குகளை எதிர்பாத்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33000 வாக்குகளை பெற்றிருப்பதானது அக்கட்சிக்கு கிடைத்திருந்த மகத்தான வெற்றியாகும்.
இந்த வெற்றியானது எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் 03 மாகாணசபை ஆசனங்களை கைப்பெற்றுவதற்கான அத்திவாரத்தினை பலமாக இட்டுள்ளது.
மேலும் இக் கட்சியானது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பொத்துவில், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய 03 பிரதேசசபைகளையும் கைப்பெற்றுவதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரை எதுவான போதிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது தனது கட்சி கட்டமைப்பினை மிகச் சரியாக நிறுவி கிராம, பிரதேச, தொகுதி, மாவட்ட, மத்திய குழுக்களை அமைக்கத்தவறினால் எல்லா முயற்சிகளும் அக்கட்சிக்கு கானல் நீராகவே போய்விடும்.
இது தொடர்பில் அக்கட்சியின் உயர்பீடம் பொருத்தமானவர்களை இனங்கண்டு அம்பாறை மாவட்டத்தின் மத்திய குழுக்களை நிறுபுவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் உண்மை விசுவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
எதுவான போதிலும் தனது அமைச்சுக்குள் 32 நிறுவனங்களை உள்வாங்கி நிர்வாகம் செய்யும் திறமை ஏலவே நிறுவிக்கப்பட்டுள்ளதால் தான் இந் நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் இணைந்து றிசாத் பதீயுதீனுக்கு இம்முறை அவரின் அமைச்சுக்குள் 36 நிறுவனங்களை இணைத்து வழங்கியுள்ளனர் போலும்.
ஆனால் றவூப் ஹக்கீமின் அமைச்சுக்குள் ஏலவே இருந்த நகர அபிவிருத்தி அதிகாரசபை பிடுங்கி எடுக்கப்பட்டு பாட்டாளி சம்பிக்க விடம் வழங்கப்பட்டுள்ளதானது வேதனைக்குரியது.
அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி-
கல்முனை.

