நடிகர் சங்க தேர்தல் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் நெருங்குவதையொட்டி இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்காக விஷால் அணியினர் சேலம் சென்றுள்ளனர். உறுப்பினர்களை சந்திக்கும்முன் விஷால் அணியினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது,
நான் என்னுடைய சொந்த பிரச்சினைக்காக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதில் உண்மையில்லை. திரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன். சேலத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நாங்கள் வரவில்லை. தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்கவே வந்துள்ளோம்.
3ஆண்டுகளாக நாங்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் இல்லை. ஆகையால், நடிகர் சங்கத்தை வலுப்படுத்தவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இதில் பிளவு ஏற்படப்போகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கமல் வெளிப்படையாகவே எங்களுக்கு ஆதரவளித்துள்ளார். பாக்யராஜ் இரு அணிகளின் கூட்டத்திலும் பங்கேற்றதில் வருத்தமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.





