பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா காலமானார் (78) நேற்று(10-10-15) இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார்.
மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமாவின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் மாலை 6 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
கடந்த சில காலமாக மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவர் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அங்கு இரவு 11.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது.
சென்னை தியாகராய நகரில் நீலகண்ட மேத்தா தெருவில் மனோரமாவின் இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டர் பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், சிவகுமார், டி.ராஜேந்தர், விஜய், அஜித், அவரது மனைவி ஷாலினி, நாசர், எஸ்.வி.சேகர், ராமராஜன், தியாகு, பொன்வண்ணன், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ், கவுண்டமணி, செந்தில், பிரசன்னா, சுந்தர் சி, நடிகைகள் குஷ்பு, சினேகா உள்ளிட்ட திலையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரி அனந்தன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மனோரமா மறைவையொட்டி இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.















