திருகோணமலை மாவட்ட மீனவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் - இம்ரான்

எஸ்.எம்.சப்ரி-
திருகோணமலை மாவட்ட மக்களின் பிரதான ஜீவனோபாய நடவடிக்கையாக மீன்பிடி இருக்கின்றது. எனினும் துரதிஸ்டம் இந்த மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் கீழ் மட்டத்திலேயே உள்ளது. இது உயர்த்தப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்திய மீனவர்களைக் கட்டுப் படுத்துதல் எனும் தொனிப்பொருளிலான தனிநபர் பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

எனது மாவட்டத்தோடும் சம்பந்தப் பட்டுள்ள இந்தப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

இலங்கைக்கு இறைவன் அளித்துள்ள அருட்கொடைகளில் ஒன்று நான்கு புறம் கடல் வளம் இருப்பதாகும். இந்த வளம் நாட்டுக்கு முழுமையாகப் பயன்படுத்தப் படுமானால் நமது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும். 

ஆனால் துரதிஸ்டம் அந்த வளம் வேறு நாட்டவர்களால் சூரையாடப் படுகின்றது. குறிப்பாக இந்திய மீனவர்கள் நமது வளத்தின் பெருமளவு பகுதியைச் சுரண்டிச் செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி திருகோணமலைகிண்ணியா மூதூர் வெருகல் என்ற ஐந்து பிரதேச செயலகப் பிரிவு மக்கள் நேரடியாக கடற்றொழிலோடு சம்பந்தப் பட்டுள்ளனர். 

இங்கு 11 மீன்பிடிப் பிரதேசங்களும் 82 மீன்பிடித்தளங்களும் இருக்கின்றன. 32 ஆயிரத்து 660 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஆயிரத்து தொழாயிரத்து 40 பேர் இந்தத் தொழில் மூலம் வாழ்கின்றனர். இது திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் சுமார் 28 வீதமாகும்.

திருகோணமலை மாவட்ட மீனவக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவை எதிர் நோக்கியுள்ளனர். இதற்குப் பிரதான காரணம் இம்மீனவர்களுள் அதிகமானோர் இன்னும் பாரம்பரிய மீன்பிடியில் மட்டும் தங்கியிருப்பதாகும். இதனால் அவர்களது உழைப்பு அன்றாட நடவடிக்கைகளுக்கே போதுமானதாக உள்ளது. சேமிப்புக்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுவதில்லை. எனவே அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நவீன மீன்பிடி முறைகளோடு அவர்களை இணைக்க வேண்டியுள்ளது. 

கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் படி இவ்வாண்டு திருகோணமலை மாவட்டத்தில் பல நவீன மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் திருகோணமலை மாவட்டத்தவர்கள் அல்ல. எனவே திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வாறான வசதிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -