ஏ.எம்.றிகாஸ்-
இலங்கைப் போக்குவரத்துச் சபை 13 பில்லியன் ரூபா கடன்சுமையுடன் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஈபீஎம் மற்றும் ஈரீஎப் செலுத்துவதற்கு 10 பில்லியன் தேவைப்படுகிறது. மேலும் 3 பில்லியன் ரூபா கடன் உள்ளது.
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஈபீஎம் மற்றும் ஈரீஎப் செலுத்த முடியாமையினால் சபையின் அதிகாரிகள் சிறைக்குச் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை, நிதி கிடைப்பதில்லை.
எனவே இக்கடன்களைச் செலுத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்யுள்ளது. இதற்கு ஏறாவூர்ச் சாலை போன்று நாட்டிலுள்ள அனைத்துச் சாலைகளும் இலாபத்தில் இயங்க வேண்டும்
ஏறாவூர் சாலையினை மேற்பார்வை செய்வதற்கென இன்று 11.10.2015 விஜயம் செய்தபோது நடைபெற்ற விஷேட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
ஏறாவூர்ச் சாலை முகாமையாளர் எம்எஸ் அப்துல் கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இபோச தலைவர் றமல் சிறிவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் இங்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த சுமார் 18 வருடகாலமாக நிரந்தர காணி மற்றும் கட்டடமின்றி வேறு திணைக்களம் ஒன்றின் ஐம்பது வருடங்கள் பழைமை வாய்ந்த கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றில் இயங்கிவரும் ஏறாவூர்ச் சாலைக்கு போக்குவரத்து அமைச்சர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதற்தடவை எனத் தெரிவிக்கப்படுகிறது.