குப்பை வாரியைத் தூக்கித் தோளில் போட்ட மைத்திரி..!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்,2013 ஏப்ரல் 22 ஆம் திகதி, உலக புவி நாளை முன்னிட்டு, காலிமுகத்திடல் கடற்கரையில், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போதைய அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன். 

அதே காலிமுகத்திடல் கடற்கரையில், கடந்தவாரம். கரையோர சுத்திகரிப்பு நாளை முன்னிட்டு குப்பை வாரியைத் தூக்கித் தோளில் போட்டபடி, சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்குமிடையிலும், பல ஒற்றுமைகள், குறியீடுகள், இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் மறைந்து கிடப்பதை சாதாரணமாக எவராலும் இலகுவில் கண்டுபிடித்திட முடியாது.

இலங்கையில், குப்பைகளை அகற்றும் பணியை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து வைத்திருந்தார் அமெரிக்கத் தூதுவர். இப்போது அதனைக் கையில் எடுத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இது அவராக எடுத்துக் கொண்டது என்று கூறுவதை விட, அவரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறுவது அதிக பொருத்தமுடையதாக இருக்கலாம்.

2013ஆம் ஆண்டு, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் காலிமுகத்திடலில் குப்பைகளைப் அகற்றிய போது, அது பலருக்கு ஆச்சரியமுடைய விடயமாக இருந்தது.

ஏனென்றால், அப்போதிருந்த ஆட்சியில், அதிகாரம் படைத்தவர்கள், இத்தகைய பணிகளில் இறங்குவதை மக்களால் காணமுடியாத நிலை இருந்தது.

வெள்ளைச்சட்டை அரசியல்வாதிகள், துவக்கவிழா, திறப்பு விழாக்களையும், நிகழ்வுகளையும், மாநாடுகளையுமே அலங்கரிப்பவர்களாக இருந்தனர்.

அதிகாரத்துவ ஆட்சியின் விம்பங்களையே தரிசித்த மக்களுக்கு அமெரிக்கத் தூதுவர் காலிமுகத்திடலில் குப்பைகளை அகற்றிய காட்சிகள் பத்திரிகைகளின் முதற் பக்கத்தை அலங்கரித்த போது ஆச்சரியமாக இருந்தது.

ஆனால், அதன் பின்னால் இருந்த மறைமுக நிகழ்ச்சி நிரல் அவர்களில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

அதனை வெறும் உலக புவி நாளுக்கான ஒரு சுத்திகரிப்பு நிகழ்வாக பார்த்தவர்களே அதிகம் பேர்.

ஆனால், அதனுள் ஒரு மறைமுக நிகழ்ச்சி மாத்திரமன்றி ஒரு குறியீடும் அடங்கியிருந்தது.

இலங்கையில் குப்பைகளை அகற்றும் பணியை அமெரிக்கா துவங்கியிருக்கிறது என்ற உட்பொருளை அப்போது பலரும் விளங்கிக் கொள்ளவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகள், தமது தூதரகங்களின் மூலம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் அனைத்தின் பின்னாலும் ஒரு இராஜதந்திர உள்நோக்கம் இருப்பது வழக்கம்.

அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கத் தூதரகத்தின் எல்லா செயற்றிட்டங்களையும் கவனமாக கண்காணித்து வந்தார். பல திட்டங்களை செயற்படுத்த விடாமல் தடுத்தார்.

அதற்கு ஓர் உதாரணம், வன்னியில் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை அனைத்து வசதிகளையும் கொண்டதாக மாற்றியமைக்க அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம் முன்வைத்த திட்டத்தை, மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கடைசி வரை செயற்படுத்த விடாமல் தடைவிதித்ததைக் குறிப்பிடலாம்.

மிச்சேல் ஜே சிசன் அமெரிக்கத் தூதுவராக,2012 செப்டெம்பரில் தான் பொறுப்பேற்றிருந்தார்.

அப்போது தான், பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஜெனீவாவில் முன்வைத்து, அமெரிக்கா, இலங்கையின் கழுத்தை நெரிக்கத் தொடங்கியிருந்தது.

முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில், கொழும்பு வந்த மிச்சேல் ஜே சிசன், இரண்டாவது அமெரிக்கத் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தான் காலிமுகத்திடலில் குப்பைகளை வாரத் தொடங்கினார்.

அவரது குப்பை அகற்றும் நடவடிக்கை, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை அகற்றும், இலங்கையில் ஜனநாயகத்தை மீளமைக்கும், மனித உரிமைகளை மீளநிலைப்படுத்தும்; ஊழல்களைக் களையும் ஒரு குறியீட்டைத் தான் வெளிப்படுத்தியது என்பதை இப்போது பலராலும் புரிந்துகொள்ள முடிகிறது.

மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர், இத்தகைய செயல்முறைகள் அனைத்துக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கிறது. உதவிகளை வழங்குகிறது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் வரையில், இலங்கையில் தமது செல்வாக்கை நிலைப்படுத்த முடியாது என்பதையும், சீனாவின் நிழலில் இருந்து அதனை விடுவிக்க முடியாது என்பதையும், உள்நாட்டில் மனித உரிமைகளையோ ஜனநாயகத்தையோ, சட்டத்தின் ஆட்சியையோ ஏற்படுத்த முடியாது என்பதையும் அமெரிக்கா நன்றாக உணர்ந்திருந்தது.

அந்தநிலையில் தான், ஒரு பக்கத்தில் ஜெனீவாவில் கழுத்தை நெரிக்கத் தொடங்கிய அமெரிக்கா இன்னொரு பக்கத்தில், மிச்சேல் ஜே சிசனை, இலங்கைக்கான தூதுவராக கொழும்புக்கு அனுப்பியது.

அவர் ஏற்கனவே லெபனான், சியராலியோன் போன்ற கொந்தளிப்பான நாடுகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

இலங்கையில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்தி, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான அணியை வலுப்படுத்தியவர் அவர் தான். அவரது செயற்பாடுகள், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு அச்சமூட்டியதால் தான், அவருடன் முரண்பட்டது.

பல விடயங்களில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், மிச்சேல் ஜே சிசனை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால், ஐ.நாவுக்கான பிரதி தூதுவராகப் பதவி உயர்த்தப்பட்டார்.

இலங்கையில் அவர் மேற்கொண்ட பணியின் விளைவுகள் நிரூபிக்கப்பட முன்னரே அவருக்கு, உயர் பதவி அளிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே, இலங்கையில் இருந்து சென்று விட்டார் மிச்செல் ஜே சிசன்..

ஆனால், அவர் பணியில் இருந்த இரண்டு ஆண்டுகளிலும், சிவில் சமூகத்தைப் பலப்படுத்த மேற்கொண்ட முயற்சிக்கான பலன், அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே, ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் கிடைத்திருந்தது.

மஹிந்த ராஜபக்ச தூக்கியெறியப்பட்டதையடுத்து, அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறத் தொடங்கியது.

ஒரு பக்கத்தில், அமெரிக்காவின் நலன் உறுதிப்படுத்தப்பட்டாலும், இன்னொரு பக்கத்தில், இலங்கையின் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் செயற்பாடுகளும், முன்னேற்றமடையத் தொடங்கியுள்ளன.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், எதையுமே அமெரிக்கா நேரடியாக களமிறங்கி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, எதிர்பார்த்த மாற்றங்கள் கொஞ்சமேனும் தானாக நிகழத் தொடங்கியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கத் தூதுவர் காலிமுகத்திடலில் குப்பைகளை அகற்றிய போது, அரசாங்கத்தின் தரப்பில் இருந்து கைகொடுக்க யாரும் வரவில்லை.

இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தானே குப்பைவாரியுடன் புறப்பட்டிருக்கிறார். அவருடன் அரசதரப்பில் இருந்து பலரும் கிளம்பிச் சென்றனர்.

அவரது இந்தச் செயலின் குறியீடு தனியே கடற்கரைகளைச் சுத்தம் செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டது அல்ல. அதற்கும் அப்பால், எமது குப்பைகளை நாமே அள்ளத் தயார் என்ற இலங்கையின் வெளிப்பாடும் கூட.

அதுவும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டில் விசாரணைகளை மேற்கொள்ளத் தயார் என்று அரசாங்கம் அறிவிக்கின்ற அளவுக்கு நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆனால், உள்நாட்டு விசாரணைகளின் மூலம் மட்டும் எல்லாவற்றையும் தீர்க்க முடியாது என்பது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு. அதனால் தான் சர்வதேச உதவிகளுடன் விசாரணைகள் மேற்கொள்ள வலியுறுத்துகிறது.

ஊழல், மோசடிகளை அகற்றவும், கடந்த காலத் தவறுகளைக் களையவும், தவறுகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்கவும் தற்போதைய அரசாங்கத்துக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -