தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததன் ஊடாக ஜனநாயகம் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் ஊடாக மக்களின் ஆணையை முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவி வழங்கப்பட்டமை குறித்து நான் இனவாத அடிப்படையில் பார்க்கவில்லை.
1977ம் ஆண்டு அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, சுதந்திரக் கட்சியை விடவும் ஆசனங்கள் அதிகமாகக் காணப்பட்டன.
எனினும், இன்று அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு குறைந்தளவு ஆசனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒப்பீட்டளவில் பலவீனமான ஆளும் கட்சி ஒன்றையும், பலமான எதிர்க்கட்சியொன்றையும் மக்கள் தெரிந்துள்ளனர். மக்களின் விருப்பம் அதுவாகவே காணப்படுகின்றது.
எனினும் மக்கள் ஆணைக்கு புறம்பான வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆளும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர்.
இதனால் ஓர் இடைவெளியும் குழப்ப நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஏற்படுத்தப்பட்ட இடைவெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புகுந்து கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 95 ஆசனங்களுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மொத்தக ஆசனங்கள் 16 மட்டுமேயாகும்.
சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதியினர் இணைந்து கொண்டாலும் 55 பேர் எதிர்க்கட்சியில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எஞ்சியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமானதாகும்.
இவ்வறான ஓர் நிலைமையில் சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியமை சாதாரண நடைமுறைகள் மற்றும் பொது அறிவிக்கு அப்பாற்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.
வலிகாமம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது, இந்தக் கூட்டத்திற்கு சம்பந்தன் தலைமை ஏற்றிருந்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் பிரபாகரனே தங்களது அசகாய தலைவர் என அறுதியிட்டுக் கூறியிருந்தனர்.
பிரபாகரனைப் போற்றி புகழ்ந்தேத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியமை, குற்றம் இழைத்த ஒருவருக்கு விருது வழங்குவதற்கு நிகரானது என தயான் ஜயதிலக்க சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
