றியாஸ் ஆதம்-
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தூரமாக்கப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி கிழக்கில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதற்காகவே முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவை வரவேற்றும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட மகிழ்ச்சிப் பெருவிழாவில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த மஹிந்த ஆட்சியின் போது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சற்று தூரமாக்கப்பட்டிருந்தார்கள் அதன் காரணமாகவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம்கள் தோல்வியடைந்தார்கள்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாலர்களை கௌரவிக்கும் முகமாக எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சொற்ப வாக்குகளினால் தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்களுக்கு தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு விசேடமாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாங்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களோடு இணைந்து செயற்படுவதாக மக்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். ஆனால் அப்போது சில மாற்றுக் கட்சியினர் எங்களை தோற்கடிப்பதற்காக நாங்கள் மஹிந்தவோடு கூட்டுச் சேர்ந்துள்ளதாக விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அன்று நாங்கள் கூறிய விடயங்களை இன்று நிருபித்துக்காட்டியுள்ளோம்.
குறிப்பாக கடந்த தேர்தல் காலங்களில் சில உலமாக்கள் பள்ளிவாசல் மிம்பர் மேடைகளை தேர்தல் பிரச்சாரத்திற்காக பாவித்தார்கள் விசேடமாக அவர்கள் குத்பா பிரசங்கங்களின்போது மஹிந்த ராஜபக்ஷவை எங்களோடு தொடர்புபடுத்தி எங்களுக்கு வாக்களிக்க வேண்டாமென பகிரங்கமாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மார்க்க விடயங்களை மக்களுக்கு போதிக்கின்ற இந்த உலமாக்கள் தேர்தல் காலங்களில் சிலருக்கு ஊது குழலாக செயற்படுவது கன்டிக்கத்தக்க விடயமாகும் இவைகளை மிக மனவேதனையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த தேர்தலின் போது காத்தன்குடியில் நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் உரையாற்றும் போது சில விடயங்களை தெளிவாகச் சொன்னார்கள் அதாவது நல்லாட்சிக்கான இயக்கம் சொற்ப வாக்குகளினாலே தன்னை தோற்கடிக்க முடியும் ஆனால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது அதேபோன்றுதான் தேர்தல் முடிவுகளும் வெளியாகியது அப்போது ஹிஸ்புல்லா அவர்கள் தோல்வியுற்ற செய்தி கேட்டு இலங்கையின் நாலா பாகங்களிலிருந்தும் அரசியல் ஆர்வலர்களும், எனது நண்பர்களும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு ஹிஸ்புல்லா அவர்களின் தோல்வி முழுக் கிழக்கு மாகாணத்திற்குமான தோல்வியே எனக்கூறினார்கள் அப்போது மட்டக்களப்பு மாவட்டம் சோகத்தில் மூழ்கிக்காணப்பட்டது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஹிஸ்புல்லா அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளதாக செய்திகளும் வெளியாகியது இதனை தடுப்பதற்காக காத்தன்குடியில் இருக்கின்ற நல்லாட்சிக்கான இயக்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடாத்தியது இச்செயற்பாடானது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை வெளிக்காட்டியுள்ளது.
குறிப்பாக நாட்டின் நாலா பாகங்களிலும் தங்களுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் தேசியப்பட்டியல் ஊடாக அரசியல் அதிகாரம் கோருகின்ற இக்காலகட்டத்தில் அதனை எங்களது மண்ணுக்கு வழங்க வேண்டாமென ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவது இந்த மண்ணுக்குச் செய்யும் துரோகமாகவே பார்க்க வேண்டியுள்ளது இது நல்லாட்சிக்கான இயக்கத்தின் பிற்போக்கு தனமேயன்றி வேறொன்றும் கிடையாது ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க மும்மூரமாக செயற்பட்ட அவ்வியக்கம் இறுதியில் படுதோல்வி அடைந்ததை முழுச் சமூகமும் நன்கறியும் குறிப்பாக நல்லாட்சிக்கான இயக்கம் அவர்களுக்கென்றொரு அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதனை கைவிட்டுவிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அரசியல் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு முயலுவதனை மட்டக்களப்பில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் கன்டிக்க வேண்டிய விடயமாகும்.
இந்த நல்லாட்சிக்கான இயக்கமானது கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசியப் பட்டியல் வழங்கக்கூடாது என பாரியதொரு ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியிருந்தால் இந்த நாட்டில் வாழும் மக்கள் அதனை நியாயபூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள் ஆனால் அதைவிடுத்து தனிப்பட்ட குரோதங்களுக்காக தனிநபரை இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மூலும் அவர்கள் மூக்குடைந்தது மாத்திரமல்லாமல் அவ்வியக்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.
கடந்த தேர்தலுக்காக நல்லாட்சிக்கான இயக்கம் சுமார் 17 மில்லியன் ரூபாய்களை செலவளித்ததாக அறிவித்துள்ளது கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் நல்லாட்சி சம்மந்தமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு தூய்மையான அரசியல் செய்வதாக கூறிய இவர்கள் எதற்காக இவ்வளவு பணங்களை செலவளித்தார்கள் என சிந்திக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
