அரசியல் அமைப்பு சபை, நேற்று மாலை, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது.
இதன்போது, எதிர்வரும் காலத்தில் நியமிக்கப்பட உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக, அரசியல் அமைப்புச் சபையின் உறுப்பினரான ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
சபாநாயகரின் தலைமையில் கூடிய அரசியலமைப்பு சபையில் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் உறுப்பினர் தெரிவின் போது உள்ள முறையான நிகழ்ச்சி நிரல் பற்றியும் தகுதிகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே செயற்பட்ட ஆணைக்குழுக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே, அரசியல் அமைப்பு சபைக்கு குடியியல் உறுப்பினர்கள் மூன்று பேர், நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று கூடிய அரசியல் அமைப்புச் சபைக் கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் அரசியல் அமைப்புச் சபை முதற் தடவையாக கடந்த 10 ஆம் திகதி கூடியது.
சபையின் தலைவரான கரு ஜயசூரியவிற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாஸ ராஜபக்ஸ, பாட்லி சம்பிக்க ரணவக்க மற்றும் டபிள்யு.டீ.ஜே செனவிரத்ன, விஜித ஹேரத் மற்றும் குடியியல் உறுப்பினர்களான பேராசிரியர் ஏ.டி ஆரியரத்ன, பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஷீஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
