முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட சிலர் இன்றும் பாரியளவிலான மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ,துமிந்த சில்வா, கோட்டே மேயர் ஜனக்க ரணவக்க மற்றும் மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகைதந்திருந்தனர்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன இன்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு சமூகமளித்திருந்தார்.
ஊவா மாகாண சபை உறுப்பினர் அநுர விதானகமகேவினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பிலான முறைப்பாட்டுக்கு சாட்சியமளிப்பதற்காக அவர் சமூகமளித்திருந்தார்.
இதேவேளை இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சமூகமளித்திருந்தார்.
முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன , மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான விலைமனுக்கோரலில் செய்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தகவல் வழங்குவதற்காக அவர் வருகைதந்திருந்தார்.
