கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு விசேட அனுசரணைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்களை ஒருங்கிணைக்க குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர்களாக சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளனர்.
மாதம் தோறும் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூடி, தோல்வியுற்ற தொகுதிகளின் பொதுமக்கள் மேம்பாடு மற்றும் கட்சியின் மீள்ஒருங்கிணைப்பு அலுவல்களை கவனிக்கவுள்ளனர்.
தேசிய அரசாங்கத்தின் பின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தனியான சந்திப்பொன்றின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய அரசாங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்
தேசிய அரசாங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தேசிய அரசாங்கம் தொடர்பாக சில சந்தேகங்களை முன்வைத்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து விடுவதே தேசிய அரசாங்கம் என்பதாக பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால, தேசிய அரசாங்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பரவியிருக்கும் தவறான கருத்துக்களுக்கு விளக்கமளிக்கவும், தேசிய அரசாங்கத்தின் பலாபலன்கள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைக்கவும் சுதந்திரக் கட்சி சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் துமிந்த திசாநாயக்க, எஸ்.பி.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சரத் அமுனுகம ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
