கலைமகன் பைரூஸ்-
“கல்வியில் அழகியல் அம்சங்கள் பல உள்ளன. அதனை தமிழ் மொழியைக் கற்பதனூடகத்தான் பெற முடியும். தமிழ் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தை உடையது. தமிழில் வெளிவந்துள்ள பண்டைய இலக்கியங்களாக இருந்தாலும் நவீன இலக்கியங்களாக இருப்பினும் அவற்றில் நாம் மகிழ்ந்து இன்புறத்தக்கவை பல உள்ளன. அவற்றை விளங்கிக் கொள்வதற்கும், தாய்த் தமிழ் காலத்தின் நின்று நிலைக்கவும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது” என கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பேராசியருமான சோ. சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி ஆரம்ப வைபவம் நேற்று (15) தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. மு. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் –
“கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனில்
பட்டுத் தெறித்தது மானின் விழி! என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடலும்,
“காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்!” மகாகவி பாரதியாரின் பாடலும் எங்களுக்கெல்லாம் மனித விழுமியங்களை,அழகியல் உணர்வுகளைத் தெளிவாக எடுத்தோதுகின்றன. இவ்வாறான பாடல்கள் பலவும் தமிழில் உள்ளன. இவற்றைக் கற்காதவர்கள் தங்களைத் தமிழன் என்று கூறிக் கொள்வதில் என்னதான் பயனிருக்கின்றது.
இன்று கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஓர் உயர் கல்வி நிறுவனமாக மாறிவருகின்றது. இலங்கையில் க.பொ.த. சா.த வகுப்புடனும் க.பொ.த. உ.த வகுப்புடனும் தமிழ் முடிவடைகின்றது. பின்னர் பல்கலைக்கழகம் நுழைவோரில் சிலர் தமிழை ஒரு பாடமாகப் பயில்கின்றனர். அத்தோடு தமிழின் நிலை என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். இன்று தொழில் கல்விக்குக் கொடுக்கும் முன்னுரிமை, ஆங்கிலக் கல்வியின்பாலுள்ள மோகம் தமிழ்மீது குறிப்பாக பெற்றோருக்கு இல்லை…
இலங்கையின் கல்விக்கொள்ளை என்னவென்றால் தமிழ் பேசும் பிள்ளைகள் தமிழிலேயே கல்வி கற்க வேண்டும், ஏனைய மொழிகளில் கல்வி கற்கக் கூடாது என்பது. ஆனால் நமது தமிழ்ப் பெற்றோர்கள் இக்கல்விக் கொள்கைக்கு மாறாகவே செயற்படுகின்றனர். தமிழ்மொழி மூலம் கல்வி கற்கும் பெற்றோருக்கும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பெற்றோருக்கும் இடையில் தகராறுவேறு ஏற்படுகின்றது. இது அரச மேலிடம் வரை சென்றுள்ளது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக அரசாங்கம் இன்று இருமொழிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று அரச பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வி மட்டும் என்ற முறைமை இல்லை.
உலகத்திலேயே தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் மட்டும்தான் படிக்க வேண்டும் என்ற கொள்கை இலங்கையில் மட்டுந்தான் உள்ளது.
இன்று நாங்கள் அறிவுப் பொருளாதாரக் காலத்தில் வாழ்கின்றோம். எனவே இக்காலத்தில் எமது காலாசாரம்,பண்பாடு அழிந்துவிடாதபடி நாங்கள் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களது மதத்தை வைத்துக் கொண்டு வழிபிறழாது வாழ்வார்கள். ஆனால், தமிழ் மக்கள் ஆங்கில மோகத்தில் தங்கள் பண்பாடுகளை மறக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. தமிழர்கள் என்று தங்கள் மொழியைக் கைவிடுகின்றார்களோ அன்று நிலை கவலைக்கிடமானதாக மாறும்.
தமிழிலுள்ள இலக்கியத்தைப் படித்து இன்புறுவதற்காகவேனும் தமிழன் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்மொழி அல்லாத வேறு எந்தவொரு துறையில் மனமகிழ்வடைய முடியாது. கொழும்பிலேயே தலைசிறந்த நூலகம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகம். அதனை பட்டயக் கல்வி மாணாக்கர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. மகேசுவரன், சப்ரகமுவ பல்கலைக்கழகப் பேராசிரியர் நாயக்கர் ஆகியோரும் உரையாற்றினர். சைவப் புலவர் சு. செல்லத்துரை “கற்கை நெறியின் நோக்கமும் இலக்கும்“ பற்றி உரையாற்றினார்.
மாணவர் அறிமுகம், விரிவுரையாளர் அறிமுகம், பாடத்திட்ட அறிமுகம் என்பன இடம்பெற்றதன் பின்னர் சென்ற ஆண்டு நடைபெற்ற தமிழ்ப் பட்டயக் கற்கை நெறி பற்றி ச. சர்வலோகேஸ்வரி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். திருமதி வளர்மதி சுமாதரன் நன்றியுரை வழங்கினார்.
