மக்களால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச எதனை கூறினாலும் அதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த சேதமும் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அல்ல எனவும் இதனால், அவரது பேச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மினுவங்கொட வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற புண்ணியதான நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக மெதமுலனவில் நேற்று தெரிவித்திருந்த மகிந்த ராஜபக்ச, தனது உரையில் அதிகளவான நேரத்தை ஐக்கிய தேசியக் கட்சி மீது மாத்திரமல்லாது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதும் குற்றம் சுமத்துவதற்காகவே செலவிட்டார்.
