க.கிஷாந்தன்-
தலவாக்கலையில் 08.07.2015 அன்று இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இருவர் தாக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது டிக்கோயா தோட்ட பகுதியில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் “ஏன் சத்தியாகிரக போராட்டத்திற்கு சென்றீர்கள்” என தெரிவித்து தங்களை தாக்கியதாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் மேற்படி தாக்கப்பட்ட .தொழிலாளர். தேசிய சங்கத்தின் ஆதரவாளர் இருவரும் முறைபாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் 08.07.2015 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைபாடையடுத்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நான்கு பேர் அட்டன் பொலிஸாரால் 08.07.2015 அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 09.07.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரசாத் லியனகே உத்திரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.