அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ்
சுதந்திர இலங்கையின் 67 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமயம் பார்த்து ஏமாற்றப்பட்ட நமது முஸ்லிம் தலைமைகள் இன்னும் புத்தி தெளியவில்லை போல் தெரிகின்றது. ஆதலால்தான் தீர்மானகரமான இந்தச் சந்தர்ப்பத்திலும் பேரினவாதக் கட்ச்சிகளிடமே தங்களது அரசியலை அடமானம் வைப்பது தொடர்பாகவே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த 2015 ஜுன் மாதம் 26ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து இன்றளவும் எந்தவொரு முஸ்லிம் தலைமையும் தங்களுக்குள் இருக்கின்ற கட்ச்சி மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் குரோத மனப்பாண்மைகளையும் புறந்தள்ளி சமூகத்திற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் அது பற்றி எவ்வித கவலையும் கரிசனையும் காட்டுவதாகத் தெரியவில்லை.
இதே நேரம் நாடு தழுவிய மட்டத்தில் ஒரு சில குறிப்பிடத்தக்க சமூக சிந்தனையற்ற சுயநலமிகளைத் தவிர அனைத்து முஸ்லிம்களும் எங்கே நமது தலைமைகள் ஓரணியில் ஒன்று சேராதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள் .
தேசிய மட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடவே விரும்புகின்றோம் அதற்க்காக என்ன விலை கொடுக்கவேண்டி வந்தாலும் என்ன தியாகங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டாலும் சரி எமக்கு வேண்டியது தனித்துவமான ஒரே தலைமையே தவிர மீண்டும் மீண்டும் ஒரே குழியில் பல தடவைகள் விழுகின்ற சோரம் போன தலைமை அல்ல.
எனவே நம் சமூக ஆண்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக சிந்தனையாளர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் படித்த வர்க்கத்தினர்கள் பாமரர்கள் சாதாரண தொழிலாளிகள் விவசாயிகள் போன்ற அனைத்து வர்க்கத்தினர்களும் அனைத்து விதமான வேறுபாடுகளையும் மறந்து ஒரே சகோதரர்களாக அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுவதன் மூலம் மாத்திரமே எமக்கு எதிரான சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க முடியும் என்பதில் முதலில் உடன்பாட்டுக்கு வருதல் வேண்டும்.
அவ்வாறு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் உதவியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எம்மை வந்தடையும் என்பதில் ஒரு ஈமானியனுக்க அனுப்பிரமானமேனும் சந்தேகம் ஏற்ப்படக் கூடாது.
ஆல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (அல்-குர்ஆன்: 47: 7)
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கை விட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன்: 3: 160)
அவ்வாறு நாம் ஒன்று படாது வழக்கம் போல் இதிலும் அரசியலுக்குள் இஸ்லாத்தைப் புகுத்த வேண்டாம் என்று கூறி இதிலும் கருத்து வேறுபாட்டையே மூலதனமாக்கி நமது இஸ்லாம் பற்றிய ஞானசூண்யத்தை நம் வரலாற்றில் மீண்டும் ஒரு முறைப் பதிவு செய்து விடுவோமாக இருந்தால் நிச்சயமாக அது நம் வருங்கால சந்ததினர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் சமூகத்துரோகச் செயலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே ஏமக்கு மத்தியில் காணப்படும் சகலவிதமான பிரிவினைவாதத்திற்கும் நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் நாம் இந்நாட்டில் நம்மை முஸ்லிம் என்று சொல்வதற்கே அச்சப்பட வேண்டிய ஒரு நிலையை அது தோற்றுவித்து விடும்; என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.
எனவே நாம் இந்த தீர்மானகரமான நேரத்தில் வழமை போல் சடவாதக் கொள்கைகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்காது எல்லாக் காலத்திற்கும் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் சரியானதும் முழுமையானதுமான வழி காட்டலினைத் தன்னகத்தே கொண்டுள்ள புனித அல்-குர்ஆன் அல்-ஹதீஸின் வழிகாட்டுதலில் அறிவார்த்த மற்றும் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை வகுத்து ஜனநாயக ரீதியில் எதிரிகளை எதிர் கொள்வதற்கான சிறந்ததொரு களமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகுதல் மிக மிக அவசியமாகும்.
எணவே நாமனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் ஒரே கொள்கையின் கீழ் களமிறங்கி நமது உரிமைகளை வென்றெடுக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் முன்வருமாறு வேண்டுகின்றேன்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
