எஸ்.எம்.அறூஸ்-
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 14வது நினைவு தின நிகழ்வு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 16ம் திகதி கல்முனைத் தொகுதியில் உள்ள 30 இடங்களில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்டத்தின் பல அரசியல் பிரமுகர்களையும் கலந்து கொள்ளச் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தானும் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பிற்பாடு அன்று மாலை இடம்பெற்ற துஆப்பிரார்த்தனைகளிலும் பங்கு கொண்டார்.
காலம் செல்லச் செல்ல நமது பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபத் தலைவரும், அமைச்சருமான மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் பற்றிய நினைவுகளும், ஆளுமைகளும் மறக்கடிக்கப்பட்டு வருகின்றமை மிக கவலைக்குரிய விடயமாகும்.
தேசிய அரசியலில் முஸ்லிம் அடையாளத்தை விதைத்து பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை ஆக்கிய ஆளுமைதான் பெருந்தலைவர் அஸ்ரபாகும். அஸ்ரப் மரணித்தாலும் அவர் விதை்துவிட்டுச் சென்ற விதை இன்று ஆலமரமாகக் காட்சியளிக்கின்றது.
தேர்தல் வந்தால் மட்டும் அஸ்ரபின் புகைப்படத்தை போஸ்டரில் போடுகின்ற வேலைகளை மட்டும் நமது அரசியல்வாதிகள் கச்சிதமாகச் செய்கின்றனர். தேர்தல் முடிந்ததும் அஸ்ரபையும் மறந்து அவரது கொள்கைகளையும் மறந்தவர்களாக பதவிகளில் உலா வருகின்றனர்.
அஸ்ரப் எனும் ஆளுமை மரணித்து 15 வருடங்களாகின்றது. இன்று பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு ஆகக்கூடினால் 19 வயதுதான் இருக்கும். இதனைப் பாரக்கின்றபோது அஸ்ரப் மரணிக்கும்போது 4 வயது சிறியவர்களாக இருந்தவர்களே இன்று 19 வயது மாணவர்களாக இருக்கின்றனர்.
இந்த வகையில் பாரக்கின்றபோது நமது இளையவர்களுக்கு அஸ்ரப் பற்றிய தெளிவுட்டல்கள் கொடுக்கப்பட வேண்டியது மிக முக்கியமாகும். அஸ்ரப் எனும் ஆளுமையினால் பதவிகளும்,பட்டங்களும்,அந்தஸ்துகளும் பெற்றவர்கள் இன்று இதனைப்பற்றியல்லாம் கண்டு கொள்ளாதவர்களாக தங்களது செயற்பாடுகளை கொண்டு செல்லுகின்றனர்.
ஆனால், நமது பெருந்தலைவரின் பார்வையில் வளர்ந்து அவரின் மனதில் இடம்பிடித்த இளைஞராக தனது சமூகத்தின் உரிமைக்காக களத்தில் போராடுகின்ற தளபதியாக அரசியல்வானில் நட்சத்திரமாக பிரகாசிக்கும் கட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பெருந்தலைவரின் நினைவுகளை இளையவர்களுக்காக மீட்டெடுத்தார்.
அதுதான் தலைவர் தினம், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 16ம் திகதி தலைவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நமது இளையவர்களுக்காக றமது உரிமைக்குரலின் தளபதி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரகடனப்படுத்தியதன் நோக்கம் அஸ்ரபின் இலட்சியங்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால எழுச்சிக்கு வித்திட வேண்டும் என்பதற்காகத்தான். ஹரீசின் சிந்தனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
அரசியல் பொறாமைத்தனங்கள் இவ்வாறான முன்னடுப்புக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முற்படுவார்கள். அதனை நாம் ஒரு பொருட்டாக பாரக்கத் தேவையில்லை.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அம்பாரை மாவட்டம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தலைவர் தினத்தை நினைவுபடுத்துவதற்கான எண்ணத்துடன் ஹரீஸ் செயற்பட்டு வருகின்றார். அவரது செயற்பாட்டிற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்குவோம்.


