அஸ்ரப் மரணிக்கும் முன்பே அடுத்த தலைவர் ரவூப் ஹக்கீம் எனக் கூறினார் - அஸ்லம்

அஹமட் இர்ஸாட்:- நீங்கள் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு காலடி வைத்ததன் பின்னர் ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கிழக்கு மாகாணமும் அதனுடன் சேர்த்து தேசிய ரீதியிலும் மக்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் உங்களின் அரசில் பயணத்தினைப் பற்றி கூற முடியுமா?

அஸ்லம் எம்.பி:- நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 1988ம் ஆண்டு பெரும் தலைவர் அஷ்ரப் இருக்கும் பொழுதே இணைந்து கொண்டவன். முக்கியமாக சொல்லப்போனால் நான் யார் என்று கேட்பவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எனக்கு பின்னர் வந்தவர்களாகத்தான் இருக்கும். 

இந்தக் கட்சியின் சார்பாக பிரதேச சபையில் பத்து வருடங்களும் மாகாண சபையில் பத்து வருடங்களும் பாராளுமன்றத்தில் பத்து வருடங்களுமாக சுமார் 25 வருடங்கள் எனது அரசியல் வாழ்க்கையில் பிரபல்யம் என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதியாக நான் ஒரு போதும் வாழ நினைக்கவில்லை. அதனால்தான் நீங்கள் இவ்வாறான கேள்வியினை தொடுத்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

எங்களுக்கு மக்கள் தந்துள்ள இந்த பெருமதிமிக்க ஆணையை ஒரு அமானிதமாக நாங்கள் கருத்தில் கொண்டு அதனைப் பேணி நடக்க வேண்டிய பொறுப்பு எங்கள் மத்தியில் இருக்கின்றது. 

அந்த வகையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் கட்சிக்கும் அபிமானிகளுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் என்ற வகையிலும் முஸ்லிம்களின் கட்சி என்ற ரீதியிலும் என்னுடைய பணியினை செய்து வருகின்றேன். இன்று எல்லோரும் பிரபல்யத்தினை எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றனர். 

அந்த வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் என எல்லாவற்றிலும் தாங்கள் பிரபல்யம் அடைந்து கொள்வதற்கே எதிர்பார்க்கின்றனர். என்னைப் பொறுத்த மட்டிலே நான் செய்துள்ள பணிகளை நான் எனற என்னத்தோடு ஒரு போதும் கூறியது கிடையாது. கட்சி சமூகம் என்ற ரீதியில் என்னுடைய பணியினை மிகவும் உளத்தூய்மையோடு, முக்கியமாக கட்சிக்கு எந்த அவதூறுகளும் ஏற்படாத வண்ணம் செய்து வருகின்றேன் என்ற மனத்திருப்தி எனக்கிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- நீண்டகாலமாக கட்சியில் இருந்து வருகின்றீர்கள் எனக் கூறினீர்கள் அந்த வகையிலே பெரும் தலைவர் அஷரப்புக்கும் உங்களுக்கும் இடையில் காணப்பட்ட உறவினைப் பற்றி கூறமுடியுமா?

அஸ்லம் எம்.பி:- அக்காலப்பகுதியில் எனது சகோதரர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதற்குப் பின்னர் நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்போம் என நினைத்த வேளையில் என்னை அரசியலுக்கு அழைத்தும் நான் மறுத்து விட்டேன். இந்த நிலையிலேயே பெரும் தலைவர் அஷ்ரபினுடைய உறவும் நட்பும் எனக்கு கிடைத்தது. அவர் என்னிடம் வேண்டிக்கொண்டதற்கினங்கதான் நான் அரசியலில் பிரவேசித்தேன் அதற்குப் பின் நானும் அவரும் மிகவும் அன்னியோன்னியமாக பழகியதோடு அவர் மீது அதிக மரியாதை உடையவனாகவும் நான் இருந்து வந்தேன். எனது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான குருவாகவும் நான் அவரைப் பார்க்கும் அதேநேரம், என்னை இறைவன் கைவிடமாட்டான் என இரண்டு தடைவைகள் என்னிடம் கூறி எனக்காக இறைவனிடம் பிரார்த்தித்தும் உள்ளார்.

அஹமட் இர்ஸாட்:- பெரும் தலைவர் அஷ்ரபுடன் சிறந்த நட்பினை பேணி வந்த நீங்கள் அவருடைய மறைவிற்கு பின்னர் தற்போதைய தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீமுடன் சுமூகமாக உறவினை பேணி வருகின்றீர்கள். அந்தவகையில் கிழக்கில் உதித்த தலைமை கிழக்கிற்கு வெளியில் உருவான தலைமை என்ற வேறுபாட்டினை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்றீர்கள்?

அஸ்லம் எம்.பி:- அடுத்த தலைவர் யாரென நீங்கள் ஏன் இன்னும் கூறவில்லை என்று மறைந்த தலைவர் அஷ்ரபிடம் அவர் உயிரோடு இருக்கும் பொழுது நான் வினவிய போது அவர் அமைதியான புன்முறுவல் பூத்தவராக மௌனமாக இருந்து விட்டார். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அதே கேள்வியினை அவரிடம் கேட்டபொழுது அதற்கும் பதில் கூறாத பெரும் தலைவர் ஆறு மாதங்கள் கழிந்தன் பின்னர் நான் தனியாக நின்று அவரிடம் அதே கேள்வியினை மீண்டும் தொடுத்த நேரத்தில் பெரும் தலைவர் அஷ்ரப் என்னை விடவும் இக்கட்சிக்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைப்பாரானால் அது ரவூப் ஹக்கீமைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது எனக்கூறினார்.

அஹமட் இர்ஸாட்:- அப்படியென்றால் பெரும் தலைவர் அஷ்ரப் உயிருடன் இருக்கும் பொழுதே எனக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பதவிக்கு தகுதியானவர் ரவூப் ஹக்கீம்தான் எனக் கூறாமைக்கான காரணம் எதுவென நீங்கள் நினைக்கின்றீர்கள்?

அஸ்லம் எம்.பி:- அன்று கிழக்கிலே எல்லோரும் வடகிழக்கிற்கு வெளியில் கட்சியின் தேவை தேவைப்படாது எனவும் கிழக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி என்று கூறுகின்ற யுகமாகத்தான் பெரும் தலைவருடைய அக்காலகட்டம் காணப்பட்டது. அதன் அடிப்படையில் கிழக்கில் பல பிரச்சினைகளை முகம் கொடுக்க நேரிடலாம் என நினைத்து பெருந் தலைவர் தனது முடிவினை பகிரங்கமாக அறிவிக்காமல் இருந்திருக்கலாம். கட்சியானது முழு இலங்கை வாழ் மக்களுக்கும் உருவாக்கப்பட்ட கட்சியாகும் அந்த வகையில் இலங்கையின் எந்தப்பாகத்திலிருந்தாவது கட்சியின் தலைமைப் பொறுப்பினை எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதில் என்ற கருத்துடனேயே பெருந்தலைவர் அன்று காணப்பட்டார்.

அஹமட் இர்ஸாட்:- அப்படியென்றால் கிழக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என நினைத்துத்தான் பெருந்தலைவர் உயிருடன் இருக்கும் பொழுதே சகல பிரதேசங்களிலும் உள்ள சகல மக்களையும் இணைத்து அரசியல் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக நுஆ எனும் தேசிய ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. அப்படியென்றால் நீங்கள் கூறுவதற்கும் இவ்வாறு அஷரப் நடந்து கொண்டைமையையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அஸ்லம் எம்.பி:- பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்கள் எல்லோரும் அஷ்ரபை பார்த்து நீங்கள் மிகவும் திறமையானவர். உண்மையிலே நேர்மையானவர் ஆகவே எங்களுக்கும் உங்களுடைய கட்சியில் இணைந்து அரசியல் செய்வதற்கு ஆசை இருக்கின்றது. 

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்று கூறிக்கொண்டு சிங்கள பிரதேசங்களில் எங்களால் அரசியல் செய்ய முடியாது எனக் கூறியதன் விளைவாகவே அன்று அஷ்ரப் சக சமூகங்களையும் இணைத்துக்கொண்டு தேசியத்திலே அரசியலினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நுஆ கட்சியினை ஆரம்பித்தார். மாறாக கட்சியின் தலைமை தனக்குப் பின் ரவூப் ஹக்கீமிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடன் இருந்தமை அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு நன்றாகத் தெரியும்.

அஹமட் இர்ஸாட்:- நாட்டில் இன்று ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்றால் அதற்கு முக்கிய காரணம் மஹிந்தவின் அரசாங்கத்தில் பேருவளையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அட்டூழியங்கள்தான் முக்கிய காரணமாக பேசப்படுகின்றது. அந்தவகையில் நீங்கள் பேருவளையினை பிரதி நிதித்துவப் படுத்தியும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்களும் உங்களுடைய கட்சியும் கடைசி நேரம் வரைக்கும் மஹிந்தவுடன் ஒட்டிக்கொண்டிருந்தமைக்கான காரணம் என்ன?

அஸ்லம் எம்.பி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது இந்த நாட்டில் எல்லா அரசாங்கங்களோடும் ஆட்சி அமைப்பில் பங்காளியாக இருந்து வந்துள்ளது. ஆனால் அன்று மஹிந்த அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டேதான் நாம் முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களுக்கு குரல் கொடுத்து வந்தோம். வெளியில் இருந்து கொண்டு குரல் கொடுப்பதினை விடவும் அரசாங்கத்திற்கு உள்ளிருந்து கொண்டு குரல் கொடுக்கும் சக்தியானது வலுவான சக்தியாக அன்று காணப்பட்டது. அந்த வகையில் நீதி அமைச்சராக இருந்த எமது தேசியத் தலைமை மட்டுமே அன்று பேருவளை பிரச்சினையை சர்வதேசத்துக்குக் கொண்டு சென்று இலங்கையில் சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் ஆட்சிமாற்றம் உடனடியாக தேவை என்பதனை சர்வதேசம் உணரும் வகையில் செயற்பட வைத்தது.

அஹமட் இர்ஸாட்:- பேருவளையில் மறக்க முடியாத துயர் சம்பவமொன்று இடம்பெற்று தற்பொழுது ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில் நீங்கள் பேருவளையினை பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர் என்ற வகையில் தற்பொழுது அங்குள்ள மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது.?

அஸ்லம் எம்.பி:- அன்றைய அந்த சம்பவத்துக்காக உண்மையில் எவ்வளவுதான் நஷ்டஈடுகள் கொடுக்கப்படாலும் உடைந்த எமது மக்களின் மனங்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நிதர்சனம். கட்டங்களை திருத்தியமைக்கலாõம் அல்லது அதற்குறிய பெருமதியினை கொடுக்கலாம். ஆனால் அந்த மக்கள் கடந்த ரமழானில் அனுபவித்த துன்பங்கள் எத்தனை ரமழான்கள் களிந்தாலும் அழிந்து விடப்போவதுமில்லை வரலாறு திருத்தி அமைக்கப்பட போவதுமில்லை. எங்களால் ஒரு போதும் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகவேஅது இருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- குர் ஆன் ஹதீசினை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் உங்களுடைய கட்சியானது ஏன் முஸ்லிம் கலாசார அமைச்சினை எடுத்து முஸ்லிம்களுக்கு அபிவிருத்திகளை செய்வதில் பின் நிற்கின்றது?

அஸ்லம் எம்.பி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முஸ்லிம் கலாசார அமைச்சுப் பதவியினை அரசாங்கம் தருமானால் அதனைக் கொண்டு முஸ்லிம்களுக்கு சேவை செய்வதில் ஒரு போதும் பின்நிற்கமாட்டாது. அரசியல் வரலாற்றில் கலாசார அமைச்சினை பெற்று சேவையாற்றியுள்ளோம். 

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் ஒருவருக்கு அந்த அமைச்சானது கொடுக்கப்பட்டுள்ளமையினால் நாங்கள் அதில் கூடிய கவனம் செலுத்தவில்லை. முஸ்லிம் ஒருவருக்கு கொடுக்கப்பட்டதனை தட்டிப்பறிப்பதற்கும் எமது கட்சியானது விரும்பவுமில்லை. எதிர்காலத்தில் அமையப்போகின்ற அரசாங்கங்களில் குறிப்பிட்ட அமைச்சினை பொறுப்பேற்று நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு கூடிய சேவையினை செய்வதற்கு எமது கட்சியானது முயற்சிக்கும்.

அஹமட் இர்ஸாட்:- அண்மைக்காலமாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் அம்பாறை மாவட்டத்திலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் அதிகமாக காணப்படுகின்றது. அந்தவகையில் நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அஸ்லம் எம்.பி:- ஏனைய கட்சிகளின் வளர்ச்சியைப்பற்றி நாங்கள் சிந்திப்பதை விடவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியைப் பற்றித்தான் நாங்கள் சிந்திக்கின்றோம். முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் அடையாளம் பெற்றவர்கள்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸுக்கெதிராக அரசியல் செய்து வருகின்றனர். நீங்கள் கூறுகின்ற கட்சியினை சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள், பத்திரிகைகளில் வளர்ச்சி அடைகின்றது என புகழாரம் சுமத்தி எழுதப்படுகின்றது. ஆனால் தேர்தல் ஒன்றுக்கு அந்தக் கட்சியானது முகம் கொடுத்து பார்த்தால்தான் அதன் வளர்ச்சி எந்த மட்டத்தில் இருந்தது என்பது தெளிவாகத் தெரியும்.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தற்பொழுது ஏன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதிகம் பேசப்படுவதில்லை? அவர் தற்பொழுது எந்தக் கட்சியில் இருக்கின்றார்? கட்சியின் பாராளுமன்ற உறுபினராகவும் பொருளாளராகவும் இருக்கின்ற நீங்கள் இதற்குக் கூறும் பதில் என்ன?

அஸ்லம் எம்.பி:- முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக இருக்கும் பசீர் சேகுதாவூத் இன்னும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகவே இருந்து வருகின்றார். அதில் எந்த மாற்றுக் கருத்தோ அல்லது சந்தேகமோ கிடையாது. கட்சி அல்லது வீடு என்று வருகின்ற பொழுது பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அவ்வாறானவைகள் அரசியலில் நடப்பதானது சர்வசாதாரண விடயமாகும். முக்கியமாக நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் எந்தக் கருத்தினையும் தெரிவிக்கக்கூடியதாக இருக்கும் கருத்துச் சுதந்திரமானது நாட்டில் உள்ள ஏனைய கட்சிகளை விடவும் அதிகமாகவே காணப்படுக்கின்றது அதனாலேதான் இவ்வாறான கருத்துக்கள் வெளியில் விடப்படுக்கின்றன.

அஹமட் இர்ஸாட்:- தற்பொழுது நூறு நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த நிலையில் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு ஒத்துழைத்த நீங்களும் உங்களுடைய கட்சியும் முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கத்தினால் நன்மை அதிகமாக எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றீர்களா?

அஸ்லம் எம்.பி:- முக்கியமாக கடந்த அரசாங்கத்தில் இருந்த அச்சம், பீதி என்பன அகன்று இன்று நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். கடந்த ஆட்சியில் இடபெற்ற எங்களுடைய மார்க்கக் கடமைகளை செய்வதற்கான இடையூறுகள் இந்த அரசாங்கத்தில் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆகவே எந்த அரசாங்கத்திலும் நூறு வீதம் திருப்தி கண்டுவிட முடியாது. ஆனால் கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த அரசாங்கமானது பல மடங்கு சிறந்தது என்றே கூற முடியும்.

அஹமட் இர்ஸாட்:- வில்பத்து பிரச்சினைக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் முகம் கொடுத்தும் குரல் எழுப்பியும் வருகின்ற நிலையில் உக்களுடைய கட்சியானது மௌனமாக இருப்பதற்கான காரணம் என்ன?

அஸ்லம் எம்.பி:- வில்பத்து என்பதும் முஸ்லிம்கள் வாழ்கின்ற இடங்கள் என்பதும் வேறு வேறு இடங்களாகும். முஸ்லிம்கள் காட்டை அழித்திருக்கின்றார்கள் என்று கூறுவதானது உண்மைக்குப் புறம்பான விடயமாக காணப்படும் விடயமாகும். ஆனால் இப்பிரச்சினையினை சமூகப்பிரச்சினையாக தூக்கிக்கொண்டு அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கையாக இதனை மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. 
றிஷாத் பதியுதீனின் முயற்சியினை வரவேற்கின்ற அதே நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனை அமைதியான முறையிலேயே கையாளும்.

அஹமட் இர்ஸாட்:- வருகின்ற பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உங்களுடைய கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளீர்களா? அவ்வாறு போட்டியிட்டால் பேருவளை மக்களுக்கு எதனைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?

அஸ்லம் எம்.பி:- ஆம் நிச்சயமாக போட்டியிடத் தீர்மானித்துளேன். உண்மையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் எனது 25 வருட அரசியல் வரலாற்றில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டே எனது அரசியல் பணியினை செய்து வருகின்றேன். எனக்கிருக்கின்ற அரசியல் பயணத்தினை ஆரம்பித்து அரசியல் முகவரியினை தந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். 

அந்த வகையில் எனது கட்சிக்கு நான் நமிக்கையினை வெளிக்காட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளேன். எனது காலப்பகுதில் முஸ்லிம் சிங்கள பிரதேசங்கள் என்று பாராமல் அபிவிருத்திகள் வேலை வாய்ப்புக்கள் என பலதப்பட்ட சேவைகளை செய்துள்ளேன். 

பேரினவாத கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் செய்வதனை விடவும் அதிகமாக நான் எனது பிரதேசத்தில் அபிவிருத்திகளையும் ஏனைய சேவைகளையும் செய்து வருகின்றேன். ஆகவே எனது பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற மக்களும் மாவட்டத்தின் வாக்காளர்களும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்ளு அப்பாற்பட்டு களுத்துறை மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் வருகின்ற பொதுத்தேர்தலில் மீண்டும் என்னை பாராளுமன்றம் அனுப்புவதற்கு ஒத்தாசை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -