அன்று பிரபாகரனை தலைவராக ஏற்றவர் இன்று டக்ளஸ் தேவானந்தாவின் வேட்பாளர்!

பிரசித்தி வாய்ந்த விஞ்ஞான பாட ஆசிரியரும், பிரபல பேச்சாளருமான சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணைச் சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இரா. செல்வவடிவேல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவர். தென்னிலங்கையில் ஆசிரியராக அரசாங்க நியமனம் பெற்ற இவர் தமிழ் - சிங்கள கலவரத்தின் பின்னணியில் உத்தியோகத்தை உதறித் தள்ளினார். 

யாழ்ப்பாண மாவட்டத்தின் தனியார் கல்வி நிறுவனங்களில் விஞ்ஞான பாட ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கல்வித் துறையில் பிரகாசித்து வருகின்றார்.

மிக சிறந்த விஞ்ஞான பாட ஆசிரியர்களில் ஒருவரான இவர் தமிழ் வித்தகரும், சைவ அறிஞரும் ஆவார். கொழும்பு, யாழ்ப்பாணம் அடங்கலாக நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பட்டி மன்றங்கள், சொற்போர்கள், பிரசங்கங்கள், பேச்சுக்கள் ஆகியவற்றை நடத்தி உள்ளார். அமெரிக்கா அடங்கலாக வெளிநாடுகள் பலவற்றுக்கும் புலம்பெயர் தமிழர்களால் ஆன்மீக உரைகள் ஆற்ற அழைக்கப்பட்டு இருக்கின்றார். 

இவர் சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாண தமிழ் சங்கம், கொழும்பு கம்பன் கழகம், சன்னிதியான் ஆச்சிரமம் போன்றவற்றின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர். யாழ்ப்பாண தமிழ் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கிடையாது. யாழ்ப்பாண தமிழ் சங்கத்தை நல்லூர் சுற்றாடலில் அமைக்க பெரிதும் பாடுபட்டு வருகின்றார்.

இவர் இளமைக் காலத்தில் இளைஞர் பேரவையில் இணைந்து செயற்பட்டவர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்ற வரை வே. பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் ஆசியுடன் அமைக்கப்பட்ட மொழிச் சீர்திருத்த குழுவில் அங்கம் வகித்து செயற்பட்டார். 

இவரின் பூர்வீகம் இந்தியா. இந்திய அமைதிப் படையினர் வடக்கில் நிலை கொண்டு இருந்த காலம். படைக்கு தலைமை தாங்கி வந்திருந்த தளபதிகளில் ஒருவர் இவரின் மிக நெருக்கமான உறவினர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் அடங்கலாக இளைஞர்கள் பலரும் இவரின் தனிப்பட்ட தலையீடு காரணமாக இந்திய அமைதிப் படையினரால் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள்.

இவருக்கென்று தனிப்பட்ட அரசியல் நாட்டம் கிடையாது. மக்கள் சேவையாளர்களை அடையாளம் கண்டு ஆதரிப்பார். விமர்சனங்களுக்கு அப்பால் காலம் சென்ற அமைச்சர் தி. மகேஸ்வரன் ஆலயங்களுக்கு வாரிக் கொடுத்தார். இந்நிலையில் மகேஸ்வரனுக்காக தேர்தல் பிரச்சார மேடைகளில் தோன்றி பேசி இருக்கின்றார்.

வட மாகாண அபிவிருத்தி, மேம்பாடு ஆகியவற்றை பொறுத்த வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் காலம் பொற்காலமாக மிளிர்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு டக்ளஸ் தேவானந்தாவுடன் மிக நெருக்கமாக இணைந்து சமுதாய நற்பணிகள் ஆற்றி வருகின்றார். குறிப்பாக வட மாகாண கல்விக் குழுவின் தலைவராக இவர் ஆற்றிய சேவைகள் ஏராளம். இதே போல யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளராக இருந்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளின் முன்னெடுப்புக்கும் ஊக்க சக்தியாக செயற்பட்டார்.

யாழ்ப்பாண கல்விச் சமூகம் , சிவில் பிரதிநிதிகள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இவர் இத்தேர்தலில் வேட்பாளராக நிற்கின்ற தீர்மானத்தை எடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -