இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதி நேர அறிவிப்பாளர்கள் சிலர் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நிரந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சில அநீதியான நியமனங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், பகுதி நேர அடிப்படையில் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு முழு நேரமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை மற்றும் தேசிய சேவையில் பணியாற்றி வந்த சில அறிவிப்பாளர்கள் புதிய நியமனங்களால் பணிக் குறைப்பு செய்யப்பட்டு காலப் போக்கில் வேலையிழக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலம் காலமாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் முஸ்லிம் சேவை அறிவிப்பாளர்களே இவ்வாறு திட்டமிடப்பட்ட அடிப்படையில் வேலை இழக்கும் நிர்க்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு ஆறு அறிவிப்பாளர்களே தேவை எனும் நிலையில் வர்த்தமானியில் அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த போதிலும் தற்போது பதிநான்கு பேர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதிய நியமனங்களில் பல முறைகேடுகளும் இனத்துவ அடிப்படையிலான பாகுபாடுகளும் நடைபெற்றுள்ளதை வெளிப்படையாய் காணக் கூடியதாகவுள்ளது. ஐந்து வருடங்களுக்கு மேலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி செய்து வேதனம் பெற்றிராத ஒருவரும் புதிய நியமனங்களில் உள் வாங்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் கடைசியாக நடைபெற்ற எட்டு நேர்முகத்தேர்வுகளில் ஒரேயொரு நேர்முகத் தேர்வுக்கு மாத்திரமே சமூகளித்திருப்பதுடன் கடைசியாக நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில் இ.ஒ.கூ. பணியாற்றும் குறித்த நபரின் மாமியான பெண் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஒருவரே நேர்முகத் தேர்வில் தேர்வாளர்களில் ஒருவராய் இருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கதாகும்.
இப்படியாக பல முறைகேடுகளுடனும்,அரசியல் உந்துதல்களுடனும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்களால் பல சிரமங்களுக்கு மத்தியில் மிகத் திறமையாக பணியாற்றிய அறிவிப்பாளர்கள் தற்போது வேலையிழந்து நடுத் தெருவில் நிற்கும் நிர்க்கதி நிலை ஏற்பட்டுள்ளது.
காலம் காலமாக நட்டத்தில் இயங்கி வருகின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை ஓரளவு தூக்கி நிறுத்திக் கொள்ள கோடிக்கணக்கான வருமானத்தை உழைத்துக் கொடுக்கும் முஸ்லிம் சேவையும் மற்றும் அதன் அறிவிப்பாளர்களும் திட்டமிடப்பட்டு பழி வாங்கப்பட்டிருப்பதை எமது அரசியல் தலைவர்களும், புத்தி ஜீவிகளும் கண்டிப்பதோடு இந்த மாபெரும் அநீதிக்கெதிராக குரல் கொடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும்.
முஸ்லிம் சேவையின் நீண்ட கால நேயர்
