முஸ்லிம்களாகிய நாம் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் றமழான் மாத நோன்பானது, மாதப்பிறையை அடிப்படையாகக் கொண்டது. ஆண்டொன்று 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும், 12 மாதங்களும் ஒரே எண்ணிக்கையிலான மாதப் பிறையைக் கொண்டதாக அமைவதில்லை.
பிறை மாத நடைமுறையில், மாதப் பிறையானது 29ஆகவும், 30ஆகவும் அமைவதுண்டு. அதனால் ஆண்டுக்கு ஆண்டு றமழான் மாத நோன்பு ஆரம்பமாகும் தினமும் மாறுபட வாய்ப்புண்டு.
அந்த வகையில், கல்வி அமைச்சானது 2015ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையை 27ஃ2014 சுற்றறிக்கை மூலம் வெளியிட்டபோது, றமழான் மாத விடுமுறைக்காக 2015.06.19 முதல் 2015.07.20 வரை முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் எனஅறிவித்திருந்தாலும், அத்தினத்தில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் 18ஆம் திகதியை விடுமுறையாக்குமாறு முஸ்லிம் சமயவிவகார அமைச்சரும், ஆசிரியர் தொழிற் சங்கங்களும், முஸ்லிம் சமய நிறுவனங்களும் அரசைக் கோரியிருந்தன.
ஜனவரி 08ஆம் திகதி முதல் நல்லாட்சி செய்துவரும் தற்போதைய அரசு, இக்கோரிக்கையை ஏற்று பாடசாலை தவணை அட்டவணையை மாற்றம் செய்து, 18ஆம் திகதியை விடுமுறையாக்கி, அன்றைய தினம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கமுன்வந்து, அதற்கான அறிவிப்புக்களை அரச ஊடகங்கள் ஊடாகவும் விடுத்திருந்தது. அதற்கமைய, றமழான் மாத விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் 2015.06.18 முதல் 2015.07.19 வரை மூடப்படும் எனவும் அறிவித்திருந்தது.
ஆயினும், களநிலவரங்களை கருத்திற் கொண்டு, அரசு மேற்கொள்ளும் தீர்மானங்களை கருத்திற்கொள்ளாத முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சிலர், அன்றைய தினத்தில் மாணவர்களின் வரவு குறைந்திருந்தபோதிலும், வலுக் கட்டாயமாக ஆசிரியர்களை வரவழைத்து, பாடசாலையை நடாத்திமுடித் துள்ளார்கள். இதனால் அவர்கள் கல்விக்கு செய்த நன்மை என்னவென்று அவர்களே சொல்லவேண்டும். ஆனால், மார்க்க அனுஷ்டானங்களையும், அரசின் முடிவுகளையும் அவமதித்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.
அதாவது, எதிர்காலத்தில், இத்தகைய காரணங்களுக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரமுடியாத நிலையை, 18ஆம் திகதி பாடசாலை நடாத்தியதன் மூலம் பாடசாலை அதிபர்கள் தோற்றுவித்துள்ளனர் என்பதே, இங்கு முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாகும்.
ஆகவே, எதிர்காலத்தில் இத்தகையை இக்கட்டான சூழ்நிலையில், யாருக்கும் பாதகமில்லாத வகையில், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், யாருக்கும் பாதகமில்லாத வகையிலேயே எடுக்கப்படும் தீர்மானங்கள் அமையவேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அனைத்து அதிபர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.(ந)
