முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யாமல் விட்டதே நல்லாட்சிக்கான அரசாங்கம் செய்த பெரிய தவறு என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.
இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்திருந்தால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே அவரை தனது கைகளால் கொலை செய்திருப்பார். இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தெரியும்.
எனினும் இவ்வாறான கொலை முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ச தற்போது சுதந்திரமான முறையில் நாட்டில் உலா வருகின்றார்.
இவ்வாறு சுற்றி வரும் அவர் தற்போது நாட்டின் இறையாண்மையும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். இதன்மூலம் இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியினை குறை கூற விளைகின்றார்.
கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யாமல் விட்டதே நல்லாட்சிக்கான அரசாங்கம் செய்த பெரிய தவறு எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
