இங்கிலாந்தின் குட்டி இளவரசி சார்லட்டை அவரது சகோதரரும் இளவரசருமான ஜோர்ஜ் தனது மடியில் வைத்து கொஞ்சும் காட்சியை புகைப்படம் எடுத்த இளவரசி கேத் மிடில்டன், அதை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த மே மாதம் 2-ம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குட்டி இளவரசிக்கு அவர்கள் சார்லட் எலிசபெத் டயானா என்று பெயரிட்டனர்.
அவ்வப்போது இந்தக் குட்டி இளவரசியின் புகைப்படம் இணையதளங்களில் வெளியான போதும், தன் அண்ணன் இளவரசர் ஜோர்ஜூடன் இருப்பது போன்ற புகைப்படம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இளவரசி சார்லட்டை அவரது சகோதரர் இளவரசர் ஜோர்ஜ் தனது மடியில் வைத்து கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேத் மிடில்டன் தம்பதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் புகைப்படக்கலை பயின்ற கேத் மிடில்டன் இந்த புகைப்படத்தை ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞரைப் போல் எடுத்துள்ளார்.
தனது தங்கையை பாசமாகப் பார்ப்பது, குட்டித் தங்கையின் நெற்றியில் முத்தமிடுவது, காமிராவை பார்த்து இருவரும் சிரிப்பது என்று ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தப் புகைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
