பெலவத்தை 'அபேகம' வளாகத்தில் செவ்வாய் (16), புதன் (17) கிழமைகளில் நடைபெறும் வொஷ் என்ற தொனிப்பொருளிலான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுகாதாரம் தொடர்பான தெற்காசிய மாணவர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட 400 மாணவர்களும் எட்டு தெற்காசிய (சார்க்) நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 19 மாணவர்களும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டிற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமை தாங்குவார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் முன்னின்று நடத்தும் இந்த மாணவர் மாநாட்டிற்கு சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சர்வதேச சிறுவர் நிதியம், வொஷ் திட்டம் சம்பந்தமான சுகாதாரம் பற்றிய தெற்காசிய வலய ஒத்துழைப்பு மத்திய நிலையம், இலங்கை செயல் திட்ட அமையம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் என்பனவும் அனுசரணை வழங்குகின்றன.
இலங்கையில் நடைபெறும் 'வொஷ்' (குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுகாதாரம்) தொடர்பான இவ்வாறான முதலாவது மாநாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தூய நீர் பயன்பாடு, உடல் சுகாதாரம், கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல் என்பன தொடர்பான விடயங்களில் இந்த சார்க் பிராந்திய மாநாடு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்படி விடயங்களில் போதிய அனுபவமும், தேர்ச்சியும் மிக்க 100 செயல்பாட்டாளர்களும் மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்டு வழிகாட்டல் வழங்குவதும் ஒரு சிறப்பம்சமாகும். பாரம்பரிய, இசை நடன கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெறவுள்ளன.
இம்மாநாட்டின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பில் மாணவர் பிரகடனம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்.
