ந.குகதர்சன்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு கிராமத்தில் பெண்ணொருவர் போலி முகவர் மற்றும் போலிக் கடவுச் சீட்டின் மூலம் கணவனின் சம்மதமின்றியும், பராயம் அடையாத பிள்ளைகளினையும் கைவிட்டு மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றுள்ளதாக கணவர் லி.விஜயகுமார் மேற்படி சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம், மாவட்ட அரசாங்க அதிபர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோர்களிடம் தமது மனைவியினை மீண்டும் தமது சொந்த இடத்திற்கு உடன் வரவழைத்து தருமாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமது மனைவி கணேசன் சசிகலா வயது (28) அடிக்கடி மத்திய கிழக்கு நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து வந்ததாகவும், தாம் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த வேளை தமக்கு தெரியாமல் கடந்த 2015.05.26ம் திகதி மத்திய கிழக்கு நாடொன்றிக்கு சென்றுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
இவருக்கு போலியான ஆவணங்களை தயாரித்து வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றிக்கு போலி முகவரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வாரைப் பிரதேசம் ஓமடியாமடுவில் வசிக்கும் இவர் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பப் பின்னனி அறிக்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார்.
இந்த ஆவணங்களுக்கு ஒப்பமிட்ட கிராம உத்தியோகஸ்த்தர் பிரதேச செயலாளரின் செயலாளரது பெயர் விபரங்களை தேவையேற்படின் தெரிவிக்க தயராகவுள்ளதாகவும் கூறுகின்றார்.
தமக்கு ஜெ.அபிசாலினி (வயது 9), ஜெ.நியோலினா (வயது 7) ஆகிய இரு பெண் பிள்ளைகள் உள்ளதாகவும் இவ்வருடம் இடம்பெறப்போகும் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மூத்த மகளின் கல்வி நிலமையில் இச்சம்பவம் மனநிலை ரீதியாக பெரிதும் பாதித்து காணப்படுவதாக தெரிவிக்கின்றார்.
அத்துடன் தம்மால் இரண்டு பெண் பிள்ளைகளையும் தாயின் உதவியின்றி பராமரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். எனவே போலி முகவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்கின்றார்.
தமது பிள்ளைகளும் தாயாரை பார்க்க வேண்டும் என்றும் வரவழைத்து தருமாறும் கவலை தெரிவிக்கின்றனர்.
