சக்தி ரி. வி நடத்தும் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா எம். பி மிக நீண்ட காலத்துக்கு பிற்பாடு கலந்து கொண்டார். இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் முதல் தடவையாக மின்னல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ் ஊடக வட்டாரங்களில் அரசியல் நாரதர் என்று குசுகுசுக்கப்படுகின்ற ஜே. ஸ்ரீரங்கா ஓரளவு ஜனநாயகத்துடன் இன்றைய நிகழ்ச்சியை நடத்திச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.
எம். ஏ. சுமந்திரன் கொழும்பின் பிரசித்தி வாய்ந்த தமிழ் சட்டத்தரணிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். பின் கதவால் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் விமர்சிக்கப்படுகின்றபோதிலும் புத்திஜீவி என்கிற அடையாளத்தை உடையவர். இவரை இந்நிகழ்ச்சியிலே சட்ட வல்லுனர் என்று டக்ளஸ் தேவானந்தா விளித்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்மின்னலில் மின்னியவர் டக்ளஸ் தேவானந்தாவே என்றும் சுமந்திரனின் வாதங்கள் சோபித்து இருக்கவில்லை என்றும் நேயர்களில் பெரும்பான்மையானோர் அபிப்பிராயம் கொண்டு உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தாவின் மிக முக்கியமான கருத்துடன் சுமந்திரன் எம். பி பகிரங்கமாகவே உடன்பட்டுக் கொண்டார். குறிப்பாக தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பல கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளால் தவறவிடப்பட்டு இருக்கின்றன என்று சுமந்திரன் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு பேசினார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் முன்வைக்கப்பட்டு இருந்த தீர்வுப் பொதி பொன்னான வாய்ப்பு என்று டக்ளஸ் தேவானந்தாவால் அப்போதும் இப்போதும் சொல்லப்பட்டு வருகின்றது. இத்தீர்வுப் பொதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் சட்ட மேதாவி நீலன் திருச்செல்வம், சிவசிதம்பரம், இரா. சம்பந்தன் போன்ற தமிழர்களின் பெருத்த பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு இருந்த தீர்வுப் பொதியைத்தான் எதிர்க் கட்சியுடன் சேர்ந்து எதிர்த்து இருந்தார்கள். இது தவறுதான் சுமந்திரன் ஏற்றுக் கொண்டார்.
எதிர்க் கட்சியுடன் சேர்ந்து இத்தீர்வுப் பொதியை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எரித்தும் இருந்தனர் என்று டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு மிகவும் பிந்தியவர்களான ஸ்ரீரங்கா, சுமந்திரன் ஆகியோர் இத்தீர்வுப் பொதியை தமிழர் விடுதலைக் கூட்டணி எரித்தமையை அறிந்து இருக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால் நாடாளுமன்ற பதிவேடுகள், வீடியோ ஆவணங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் மூலம் இதை நிரூபிக்க முடியும் என்று டக்ளஸ் தேவானந்தா அடித்துக் கூறினார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு கொடுத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நன்மைகள் என்ன? என்கிற டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு உண்மையில் சுமந்திரனால் எந்தவொரு நன்மையையும் அறுத்துறுத்து சொல்ல முடியவில்லை. வார்த்தைகள் மூலம் சளாப்பினார். மைத்திரிபால சிறிசேன செய்து தருவார் என்று நம்பி இருக்கவில்லை, ஆனால் செய்து தருவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது என்று சொல்லி சமாளித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் வழக்குப் போட்டு உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலமாகத்தான் மக்களுக்கு விடுவித்துக் கொடுத்தார்கள் என்றும் இதில் தனிப்பட்ட பெருமைக்கு உரியவராக உள்ளார் என்றும் சொல்லி நெஞ்சு நிமிர்த்தப் பார்த்தார் சுமந்திரன். ஆனால் இவ்வலயங்கள் நீதிமன்ற தீர்ப்பு மூலமாக நிச்சயம் விடுவிக்கப்பட்டு இருக்கவே இல்லை என்றும் இதற்கான ஆதாரங்களை வைத்து இருக்கின்றார் என்றும் இது தொடர்பாக பகிரங்க விவாதத்துக்கு தயாராக உள்ளார் என்று சுமந்திரனுக்கு சவால் விடுத்தார் டக்ளஸ்.
மூத்த அரசியல்வாதியான டக்ளஸ் தேவானந்தா முட்டாள்த்தனமாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரியக் கூடியவர் அல்லர். அல்லாது சம்பூரில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிதாக மனுத் தாக்கல் செய்து உள்ளது. இம்மனு இப்போது வரை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. ஆனால் முத்தீர்ப்பு என்கிற விடயம் குறித்து சட்டம் அறிந்தவர்கள் மிக நன்றாக அறிவார்கள். வழமையாக நாடாளுமன்றமே சட்டங்களை உருவாக்குகின்றது. ஆனால் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்களும் சட்டங்கள் ஆகி விடுகின்றன.
இந்நிலையில் சுமந்திரன் எம். பி சொல்கின்றமையை போல உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலமாகத்தான் யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்பட்டு இருந்தால் சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலய காணி முத்தீர்ப்பின் மூலமாக இத்தனைக்கும் விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டுமே? இந்நிலையில் சுமந்திரனின் சட்டத்தரணித் தொழிலின் திறமையில், புனிதத் தன்மையில்கூட வலுவாக சந்தேகம் கொள்ள நேர்கின்றது. ஆனால் மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்கிற பூட்கையை வெளிப்படையாக முன்னிறுத்திக் கொண்டு, ஆடிக் கறக்கின்ற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்கிற பழமொழிக்கு அமைய மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் படிப்படியாக பெரும்பான்மைக் காணிகளை விடுவித்து கொடுத்தார் என்று பெருமிதத்தோடு டக்ளஸ் தேவானந்தா இம்மின்னலில் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
19 ஆவது திருத்தம் மூலமாக பல்லின நாடு என்கிற பதத்தை அரசமைப்பில் இடம்பெற வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இமாலய சாதனை புரிந்து விட்டது என்று சுமந்திரன் எம். பி முழங்கினார். இது சம்பந்தப்பட்ட பதில் விவாதத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சறுக்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் சட்ட விடயங்கள் புத்தகத்தில் இருந்து பயன் இல்லை, அவை புத்தகத்தில் மாத்திரம் இருக்குமானால் செத்த விடயங்களே ஆகும், எனவே இவ்விடயம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்ற வரை சிறுபான்மை மக்களுக்கோ, தமிழ் சமூகத்துக்கோ எந்தவொரு விமோசனமோ, விடிவோ ஏற்படாது.
இதே நேரம் இம்மின்னலில் சுமந்திரன் எம். பியிடம் டக்ளஸ் தேவானந்தா கேட்கத் தவறிய கேள்வி ஒன்று உள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரை பேரினவாதிகள். தமிழ் தலைவர்களுடன் எழுத்தில் செய்து கொண்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பதே கடந்த கால வரலாறு. இப்படி இருக்க மைத்திரிபால சிறிசேனவுடன் வாயளவிலேயே ஒப்பந்தம் செய்து ஆதரவு கொடுத்தனர் என்று சுமந்திரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் தெரிவித்துக் கொள்கின்றமை நகைச்சுவையாக மாத்திரம் அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்த பலவீனமாகவுமே உண்மையில் தோன்றுகின்றது. இது குறித்து டக்ளஸ் வினவி இருந்தால் சிக்ஸர் அடித்து இருப்பார்.
கடந்த 60 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் தமிழ் மக்களை ஏமாற்றியே வருகின்றார்கள் என்று டக்ளஸ் தேவானந்தா உறுதியாக தெரிவித்து இருந்தார். இதை மறுதலிக்கின்றமையில் சுமந்திரன் ஆர்வம் காட்டி இருக்கவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமை புறுபுறுப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.
எனவே வரும் காலத்தில் சுமந்திரன் எம். பி மீண்டும் டக்ளஸ் தேவானந்தாவுடன் மல்லுக் கட்டுகின்றமைக்கு கட்சித் தலைமையால் கடிவாளம் போடப்படலாம். அத்துடன் சுமந்திரன் எம். பி இழைத்தார் என்று கூறப்படுகின்ற துரோகக் குற்றச்சாட்டுக்களின் பட்டியல் பெருக்கல் வாய்ப்பாடு போல பெருத்துக் கொண்டு செல்கின்ற வாய்ப்பே உள்ளது.
தாய்நாடன்

