எம்.ஐ. ஸாஹிர்-
கலப்பு தேர்தல் முறை மூலம் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் தெரிவித்த கருத்து தொடர்பாக புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தாவது, ‘தேர்தல் மறுசீரமைப்புக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் உத்தேச தேர்தல் முறைமை மூலம் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்று சில சிறுபான்மைக் கட்சிகள் கூறுவது அடிப்படையற்றது.
பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் போது அதனை, இன விகிதாசாரத்திற்கு ஏற்ப சகல இனத்தவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிபந்தனை தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் 99 தி ஷரத்தின் 4 வது உப பிரிவில் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் இது அரசியல் யாப்பு உள்ளடக்கியுள்ள உத்தரவாதமும் சட்ட ரீதியான பாதுகாப்புமாகும்.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் மாத்திரமல்ல, தமிழ் சிங்கள சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் தமது அதிருப்தியை வெளியிட்டிருக்கும் வேளையில், இவரது இக்கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையில் கூட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் அஜித பெரேரா போன்றோர் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏன், முஸ்லிம் சமூக நிறுவனங்கள், குறிப்பாக முஸ்லிம்களின் தேசிய ஷூரா சபை கூட புதிய தேர்தல் திருத்தம் தொடர்பில் எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வமைப்பின் பிரதான ஸ்தாபக உறுப்பினர்களில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் முக்கியமானவராகும் என்பது பலர் அறிந்திருக்கக் கூடும்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் அவர்களின் இக்கருத்து தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் பாராளுமன்றம் செல்வதற்கான முயற்சியா என்ற கேள்வியை எழும்புவதை தவிர்க்க முடியாதுள்ளது, ஏனெனில், சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் இருந்து இப்புதிய தேர்தல் திருத்தம் தொடர்பில் இவர்தான் சார்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதேநேரம் இனவாத சிறுபான்மை கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் கட்சிகளும் இப்புதிய தேர்தல் திருத்தத்துக்கு சார்பான கருத்தைக் கொண்டிருக்கின்றன.
இப்புதிய தேர்தல் திருத்தத்தை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என பிடிவாதமாக இருப்பது சுதந்திர கட்சியாகும். அக்கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவுக்கே இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு அளித்தமை குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த முசம்மில் போன்றோர் வெளியிடும் கருத்துக்கள் புத்திஜீவிகள் மத்தியில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் அவர்களின் இக்கருத்து சிறுபான்மை சமூகங்களின் விடயத்தில் கருத்தியல் ரீதியான முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
இது தொடர்பில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ், சிங்கள அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக தேசிய ஷூரா சபை புதிய கலப்பு தேர்தல் முறை தொடர்பாக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் தெளிவுறுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்பது நிச்சயம்.
