20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எந்த தடையுமின்றி நிறைவேற்ற உதவுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அரசியல் கட்சிகளிடம் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
பொருத்தமற்ற நபர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்க நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளை தடுப்பதில் அதிஷ்டம் கொண்ட சிலர் உள்ளனர். இவர்களில் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு தேவையற்ற தலைப்புகளை முன்வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனால், 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திற்குள் முடங்கியுள்ளன எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேவையான தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக காலம் வந்துள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னிலை வகித்த ஐக்கிய தேசியக் கட்சி பின் நோக்கி செல்லக் கூடாது. புதிய தேர்தல் முறை திருத்தத்தால், சிறிய கட்சிகள் பாதிக்கப்படும் என சில சிறிய கட்சிகளின் வாதம் அடிப்படையற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் போது சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதை கூட சிலர் விமர்சித்து வருகின்றனர் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
