உலகில் எத்தனையோ பெயர் இருக்க, இங்கிலாந்தின் புதிய இளவரசிக்கு சார்லட் என்கிற பெயரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘சார்லட் எலிசபெத் டயானா´ எனப் பெயர் சூட்டப்பட்டு, அவர் இளவரசி சார்லட் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (32). இவர் ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேத் மிடில்டனை (33) சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்டது. சில மாதங்கள் முன், மீண்டும் கர்ப்பமான கேத் மிடில்டனுக்கு கடந்த 2ஆம் திகதி அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபெத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேத் மிடில்டனின் சகோதரியின் நடுப்பெயர் (middle name) சார்லட். மேலும் 1761-ஆம் ஆண்டு மன்னர் மூன்றாம் ஜார்ஜை கரம்பிடித்து 1818-ஆம் ஆண்டு வரை ஒன்றிணைந்த இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு அரசியாக விளங்கியவர்தான் சார்லட்.
சார்லஸ் என்ற ஆண் பெயரின் பெண் வடிவம்தாம் சார்லட் என்றும் கூறப்படுகிறது. சார்லட் என்ற பெயருக்கு சிறிய மற்றும் பெண்மை ஆகிய அர்த்தங்கள் உண்டு.(ந)
