அஸ்லம் எஸ்.மௌலானா-
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை முஸ்லிம், தமிழ் ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படவுள்ள கிராம மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கல்முனை மாநகர சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோதே அனைத்து உறுப்பினர்களின் இணக்கத்துடன் இந்த அனுமதியை வழங்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னதாக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தோடர்பில் முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்மொழிவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பரக்கத்துல்லா, ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், எம்.சாலிதீன், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஸ்ஹர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.sa