"மக்களைச் சுரண்டுவதற்கு அரசியல் பயன்படுத்தப்படுவதைப் போலவேதான் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்காக தொழிலாளர் தினமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது" என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் மேதின நிகழ்வில் விஷேட அதிதியாக NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது;
"வருடாந்தம் கொண்டாடப்பட்டுவரும் மேதின நிகழ்வானது பல தசாப்தங்களுக்கு முன்னர் சிகாகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை நினைவு கூறுவதற்காகவே உருவாக்கப்பட்டது. தாம் வேலை செய்யும் மணித்தியாலங்கள் வரையறுக்கப்படுவதோடு தமது ஏனைய நலன்களும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி 1886ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி தொழிலாளர்கள் பெரும்போராட்டம் ஒன்றை நடாத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு தொழிலாளர்களின் நான்கு உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. அவ்வாறான உயிர்த் தியாகங்களோடுதான் தொழிலாளர்களின் உரிமைகள் அன்று வெற்றிகொள்ளப்பட்டன. அதனை நினைவு கூரும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் தொழிலாளர் தினமாகிய இந்த நாள் அரசியல் கட்சிகளுக்குரிய நாளாக மாற்றம் பெற்றிருக்கின்றது. தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தமது பலத்தை நிரூபிப்பதற்கான தினமாக இதனை மாற்றிகொண்டுள்ளார்கள். அதன் காரணமாக தொழிலாளர் தின நிகழ்வு என்ற பேரில் ஊர்வலம் என்றும் பேரணி என்றும் தொழிலாளர்கள் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய நாட்களில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைப் போலவே தொழிலாளர் தினத்தில் அவர்களின் நேரமும் ஓய்வும் கொள்ளையடிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பல தொழிலாளர் தினங்களைக் கண்டுவிட்டோம். அரசியல் கட்சிகள் நடாத்திய பெரும் பெரும் மேதினங்களையும் ஊர்வலங்களையும் கண்டோம். ஆனால் இந்த நிகழ்வுகளில் பலனாக தொழிலாளர்கள் கண்ட முன்னேற்றம் என்ன? அவர்களின் நலன்களுக்குக் கிடைத்த உரிய உத்தரவாதங்கள் என்ன? மக்களுக்கான அரசியல் என்று சொல்லிக்கொண்டு அரசியல் வாதிகளும் கட்சிகளும் மக்களைச் சுரண்டுவதற்காகவே அரசியலைப் பயன்படுத்துவதைப் போலவே தொழிலாளர்களின் மே தினமும் அவர்களைச் சுரண்டுவதற்கான மற்றுமொரு நிகழ்வாகவே மாறி இருக்கின்றது. இந்த நிலையினை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
சாதாரண அடிமட்டத் தொழிலாளர்களாக பணிபுரிவோரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கின்றது. திடீர் மரணமோ நிரந்தர சுக ஈனமோ ஏற்படுகின்றபோது அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் குடும்பத்தின் எதிர்காலமும் சூனியமாகி விடுகின்றது. இதற்கான விஷேட காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்ட காலத் எண்ணமாகும். முறையான அரசியல் அதிகாரம் எமக்குக் கிடைக்கின்ற போது தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான விஷேட திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.(ந)
.jpg)