இஸ்லாமியர்களுக்கு எதிரான கேலிச்சித்திர ஓவிய கண்காட்சி அரங்கில் பாதுகாப்பு அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்திய 2 மர்மநபர்கள் மீது போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்லாண்ட் நகரின் புறநகர் பகுதியில் ‘கர்திஸ் கால்வெல் சென்டர்’ என்னும் அரங்கம் உள்ளது. இங்கு நேற்று மாலை இஸ்லாமியர்களுக்கு எதிரான கேலிச்சித்திரம் மற்றும் ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ‘அமெரிக்காவின் சுதந்திர பாதுகாப்பு இயக்கம்’என்னும் அமைப்பின் தலைவர் பமீலா ஜெல்லர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கண்காட்சியில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கேலி சித்திரத்துக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் (ரூ.6 லட்சத்து 30 ஆயிரம்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில் ஓவிய கண்காட்சி நடந்த அரங்கிற்கு காரில் வேகமாகவந்த 2 பேர் அரங்கின் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த அதிகாரியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக ஓவிய கண்காட்சி நடந்த அரங்கை இழுத்து மூடினர். யாரும் அரங்கை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பார்வையாளர்கள் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும், அவர்கள் காரில் வெடிகுண்டுகளை நிரப்பி ஓவிய கண்காட்சி அரங்கின் மீது தாக்குதல் நடத்த வந்திருக்கலாம் என்றும் கருதிய போலீசார் மர்மநபர்கள் 2 பேர் மீது அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் காரில் இருந்த மர்மநபர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மர்மநபர்கள் சுட்டதில் காலில் காயம் அடைந்த பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான மர்மநபர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். daily
ச
