ஏமன் நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகள் காரணமாக அங்கு சிக்கியுள்ள சுமார் 100 இலங்கையர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள், ஏமன் தலைநகர் சனா, பிரதான நகரங்களான ஹெடிடா, ஏடன் மற்றும் முக்கல்லா ஆகிய நகரங்களில் தங்கியுள்ளனர்.
இவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் ஏமனில் உள்ள சில இலங்கையர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களில் அவர்களில் நலன் காக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கத்திற்கு கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் குடியேறிகளுக்காக சர்வதேச அமைப்பு என்பன உதவிகளை வழங்கி வருகின்றன.
அதேவேளை ஏமனில் தங்கியிருக்கும் இந்தியர்களை விசேட விமானம், கப்பல் மூலம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இலங்கையர்களை அழைத்து வர உதவுமாறு இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்திய வெளிவிவகார அமைச்சிடம் இருந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் மஸ்கட்டில் உள்ள இந்திய மற்றும் இலங்கை தூதரகங்கள் தமது நாட்டு பிரஜைகளை அழைத்து வரும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
ஏமனில் இருக்கும் இலங்கையர்கள் இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள அமைச்சு மற்றும் மஸ்கட்டில் உள்ள தூதரகத்தின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் 0115839414, 0112323015 ஆகிய தொலைபேசி இலக்கங்கள்,consular@sltnet.lk, cypher@mea.gov.lk , lankaemb@omantel.net.om ஆகிய மின்னஞ்சல்கள் மற்றும் ஏமனில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கங்களான 0096 895863739ஃ 0096 899898836 தொடர்பு கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
