வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவ வேண்டும் -காத்தான்குடியின் நீதிபதி அப்துழ்ழாஹ்




புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-

சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவது போல் வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவதற்கும் காத்தான்குடி சமூகம் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் வேண்டுகோள்விடுத்தார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் இன்று (15.04.2015) மாலை நடைபெற்ற ஹிழுறியா குர்ஆன் மத்ரஸாவின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே காத்தான்குடிப் பிரமுகர்களிடம் அவர் அவ்வாறு கேட்டுக்கொண்டார்.

மஞ்சந்தொடுவாய் மஸ்ஜிதுல் ஹிழுர் ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் சகோதரர் எம்.எஸ். அபுல்ஹஸன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற இத்திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதிபதி என்.எம். அப்துழ்ழாஹ், புதிய மத்ரஸாக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற அஸர் தொழுகையையும் நடாத்தி வைத்தார்.

அதனையடுத்து அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:

சிறுபிள்ளைகள் குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்காக இவ்வாறான மத்ரஸாக்கள் நிறுவப்படுவது நல்ல விடயமேயாகும். எனினும் அவர்களுக்கு இறைவனின் வேதமான குர்ஆனை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஓதல் பயிற்சியை மாத்திரமே அவர்கள் இத்தகைய மத்ரஸாக்களில் பெற்றுக்கொள்கிறார்கள்.

வயதுக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அல்குர்ஆனை விளங்கியறியாதவர்களாகவே எம்மத்தியில் காணப்படுகின்றனர். சிறுவர்களை விட வளர்ந்தோரிடம் இறைமறையை விளங்கி அறியக்கூடிய ஆற்றல்கள் நிறையவே உள்ளன. எனினும் அதற்கான வளங்கள் எமது சமூகத்தில் உருவாக்கப்படுவதில்லை. எனவேதான் வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்கள் எமது நாட்டில் பரவலாக நிறுவப்பட வேண்டும். இத்தேவையை காத்தான்குடிச் சமூகம் கவனத்திற்கொண்டு முன்னோடியாக நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அண்மையில் 80 வயதுடைய ஒரு மூதாட்டி அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழாவாகிய செய்தியொன்றை பத்திரிகையில் பார்க்கக்கிடைத்தது. அல்குர்ஆனைக் கற்பதற்கும், மனனம் செய்வதற்கும் வயது வரையறை கிடையாது. எனவே, வளர்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் நமது இறைவேதமான அல்குர்ஆனை முழுமையாக விளங்கியறிவதற்கும், அதன் வழியில் வாழ்வதற்கும் முன் வர வேண்டும்.

அழ்ழாஹ், தனது வேதத்தைத் தானே பாதுகாக்கப் பொறுப்பெடுத்திருப்பதாகக் கூறுகின்றான். எனவே, குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவது, அவற்றைப் பராமரிப்பது, இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவது, பராமரிப்பது என்பதெல்லாம் அழ்ழாஹ் தானே பொறுப்பெடுத்துக்கொண்ட, அவனது வேதத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்குட்பட்ட விடயங்களேயாகும். அதனடிப்படையில் இத்தகைய குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இறைவனது வேதத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாமும் இன்று பங்கேற்கக் கிடைத்தமையானது மிகவும் பாக்கியமேயாகும்.

அல்குர்ஆனைக் கற்பது முதல் ஏனைய அனைத்துத் துறைசார் கல்விகளையும் கற்பதென்பது இறைவனின் பொருத்தத்தை முன்னிறுத்தியதாக இருக்க வேண்டும். இறைவனின் பொருத்தனையைப் பெற எத்தனிக்காத எந்தவொரு கல்வியாலும் இம்மையிலும், மறுமையிலும் எமக்கு எத்தகைய பிரயோசனங்களும் கிடைக்காது.
இறைவனிடமும், மனிதர்களிடமும் நாம் சிறப்புப் பெற வேண்டுமாயின் ஒரு புறம் பற்றற்றவர்களாகவும், மறு புறம் தேவையற்றவர்களாகவும் நாம் வாழ்ந்து மரணிக்க வேண்டும். இறைவன் புறத்தில் உலகப்பற்றற்றவர்களாகவும், மனிதர்கள் மத்தியில் தேவையற்றவர்களாகவும் எமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பற்றற்று வாழ்தல் என்பது, உலகத்துடனான தொடர்பாடல்களை எல்லாம் துண்டித்துக் கொண்டு காடு மலைகளுக்குச் சென்று ஒன்றுமே செய்யாமல் தனித்திருப்பதைக் குறிக்காது. அதற்கு வேறு சொற்கள் இருக்கின்றன. இறைவனுக்காக நாம் ஆற்றும் இவ்வாறான நற்கருமங்களில் மனிதர்களின் புகழ்ச்சிகளையும், மதிப்பு மரியாதைகளையும் எதிர்பார்க்காமல் இறைவனின் திருப்பொருத்தம் ஒன்றை மாத்திரம் கருதி அர்ப்பணம் செய்து வாழ்வதே பற்றற்ற வாழ்வாகும். அதேபோன்றுதான் மனிதர்களிடத்தில் நமது தேவைகளை முன்வைத்துக் கேட்டுப்பெற்று வாழ்வதும் நம்மை சிறுமைக்குள்ளாக்கி விடும். சில சமயங்களில் அது 'ஷிர்க்' எனும் கொடிய இணைவைப்பையும் கொண்டு வந்து விடும்.

'அழ்ழாஹ்வின் இந்த வேதம் எனக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமாகும்' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். எனவே, இந்த அற்புதமான அல்குர்ஆன் சம்பந்தப்பட்ட விடயங்களில் நாம் பங்கேற்பதென்பது, பெருமானார் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த பேரற்புதத்தில் நாமும் துளியளவாயினும் பங்கு கொள்ளக்கூடியதான பெரும் பாக்கியமே என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி காதி நீதிபதி அல்ஹாஜ் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி), ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி ஏ.எம். அப்துல் காதர் (பலாஹி), மெத்தைப்பள்ளிவாசல் முன்னாள் பேஷ் இமாம் அல்ஹாஜ் மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் (பலாஹி), டீஊயுளு தனியார் உயர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் றஹ்மான், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எம். மிஹ்ழார் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், மத்ரஸா முஅல்லிம்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், மத்ரஸா மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இம்மத்ரஸா அமைந்துள்ள 96 அடி நீளமும், 86 அடி அகலமும் கொண்ட இன்றைய மதிப்பின்படி சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய இக்காணியை இப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் எம்.எஸ்.எம். இப்றாஹிம் என்பவர், அழ்ழாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிழுறியா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வா சபைக்கு வக்பு செய்த நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. எல்லாம் வல்ல அழ்ழாஹ், அன்னாரது இந்த மேலான அறக்கொடையையும், இக்காணியில் இம்மத்ரஸா கட்டிடம் அமைவதற்காக இப்பிரதேச மக்களாலும், கொடையாளர்களாலும் வழங்கப்பட்ட பொருள் மற்றும் பண உதவிகளையும் அங்கீகரித்து அருள் செய்வானாக!
(படங்கள்: அப்துல் கபூர் முஹம்மது பழீல்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -