பி.எம்.எம்.ஏ.காதர்-
இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதை வஸ்த்துப் பாவனை அதிகரித்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தன் கீழ் விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம் முன்னெடுக்கப்டவுள்ளது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.
சாய்ந்தமருது அஸ்லம் பிக்மாட் நிறுவனத்தின் அணுசரணையுடன் கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்தவுள்ள 'விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம்' என்ற தொனிப் பொருளிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி-2015 தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (01-04-2015) சாய்ந்தமருது அஸ்லம் பிக்மாட் நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
கல்வி கற்க வேண்டிய இளைஞர் சமூகம் இன்று போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிமையாகி சமூகச் சீரகேட்டுக்குள் சிக்கி பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி கஷ்டப்படுகின்றனர். இவ்வாரான இளைஞர் சமூகத்திற்கு மறுவாழ்வளிக்கவே விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக சமயத்தளங்கள் ஊடாகவும் இளைஞர்கள் மத்தியிலான போதைவஸ்த்துபாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில்;
இம்மாதம் 24ம்,25ம்,26ம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன இச்சுற்றுப் போட்டியில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட 14 கழகங்கள் பங்கு பற்றுகின்றன.
1ஆம் இடத்தைப்பெறும் அணிக்கு 15.000 ரூபா பணப்பரிசும்,கிண்ணமும், 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 10.000 பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படுவதுடன் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான விருதுகளும்,பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 26ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியிலும்,பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நந்தன முனசிங்க கலந்து கொள்ளவுள்ளதாகவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் சாய்ந்தமருது அஸ்லம் பிக்மாட் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.ஆர்.அஸ்லம் றியாஜ்,பொலிஸ் அதிகாரி ஐ.பி வாஹித்,ஓய்வு பெற்ற விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகயோரும் கலந்து கொண்டனர்.
.jpg)