கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரின் ஒலுவில் துறைமுகத்திற்கான விஜயம்!

கௌரவ கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களின் பணிப்பின் பேரில் இன்று காலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பளீல் அவர்கள் துறைமுகத்தின் தற்போதைய நிர்வாக முகாமையாளர் ஜனாப்.எம்.ஏ. கபீர் அவர்களுடன் துறைமுகத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை மேற் கொண்டார். 

கடந்த 02 வருடங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளோடு கட்டி முடிக்கப்பட்டு இன்னும் செயற் படுத்தப்படாதிருக்கும் வர்த்தக துறை முகப்பிரிவு தொடர்பாக எதிர் நோக்கும் பிரச்சினைகள், அப்பிரிவினை பயன் பாட்டிற்கு உட்படுத்துவதிலுள்ள முட்டுக்கட்டைகள், நடை முறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

வர்த்தக துறைமுகப்பிரிவு :

சுமார் 46,096,369.49 யூரோ டொலர் செலவில் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியோடு மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பெரு முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டு, சமகாலத்தலைவர் கௌரவ ரவுப் ஹக்கீம் அவர்கள் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது தொடர் முயற்சியினால் 2002-2004 காலப்பகுதியில் தேவையான வெளி நாட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு இத்திட்ட நிர்மாணம் பூர்த்தி செய்யப்பட்டது. 

துறைமுகத்தின் வர்த்தக துறைமுகப்பிரிவு, மீன்பிடி துறைமுகப்பிரிவு, அதற்கான அடிப்படை வசதிகள், இறங்கு துறைகள், பாதைகள், மகாபொல நிலையம், சுற்றுலா விடுதிகள், பணியாளர் விடுதிகள், குளிரூட்டல் வசதிகள், என்று அத்தனை அடிப்படை வசதிகளும் அமையப் பெற்று கைவிடப்பட்ட நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வர்த்தக துறைமுகப்பிரிவு காணப்படுவது கவலையளிப்பதுடன் பொருளாதார அடிப்படையில் வீண் விரயமாக்கப்பட்ட செயற்திறனற்ற, வருமானமானற்ற முதலீடாகவும் கணிப்பிட வேண்டியிருக்கின்றது.

எமது மக்கள் டொலர்களில் தமது வருமானத்தைக் கணக்கிட வேண்டும், ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு தொழில்கள் வழங்க வேண்டும் என்ற மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணான முறையில் துறைமுகம் முடங்கிக் கிடக்கின்றது.

உடனடி பிரச்சினைகள்:

ஏனைய துறைமுகங்களிலுள்ளது போன்று பலமான அலைகளினால் குவிக்கப்படும் மணல் மேடுகளை உடனுக்குடன் வெளியேற்றும் முறைமைகள்,  (Sea sand  pumping systemகடலரிப்பைத் தடுப்பதற்கான பாறைச்சுவர்கள், கொள்கலன் கையாளுதல் உட்பட தேவையான இயந்திர உபகரணங்கள், தேர்ச்சிபெற்ற பொறியியலாளர்கள். ஆளணிகள் என்பவற்றை துறைமுக அதிகார சபை உடன் வழங்குவதன் மூலம் இதனை செயற் பாட்டுக்குட் படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடித் துறைமுகம் :

துறைமுகத்தின் மீன்பிடித்துறைத் திட்டம் சுமார் 2வருடங்களுக்கு முன்பு செயற்பாட்டுக்கு இடப்பட்டபோதும் அதில் தொடராக காணப்படும் குறைபாடுகள் துறைமுகத்தின் முழுமையான பயன்பாட்டினைப்பெற்று மக்கள் தமது தொழிலை நேர்த்தியாக செய்வதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன.இணைப்புச் செயலாளர் மீன்பிடித்துறையை பார்வையிட வந்தபோது மக்கள் தமது குறைகளை எடுத்துக்கூறி அவற்றை நிவர்த்திக்குமாறு வேண்டிநின்றனர். தமது இயந்திரப்படகுகள் அடிக்கடி சேதமடைகின்றபோது அவற்றை வெளியிலே எடுத்து திருத்துவதற்கான (slip way-boat  yardவசதிகளோ, பாரம் தூக்கி வசதிகளோ இல்லையென்றும் அதற்காக கூடுதலான பணம் செலவிட வேண்டியுள்ளதையும் அவர்கள் எடுத்துக்கூறினர். 

அமையப்பெற்றுள்ள 'ஐஸ் பிளான்ற்' ஐ இயக்குவதற்கு துறைமுக கூட்டுத் தாபனத்தின் பங்களிப்பு அவசியமென சுட்டிக் காட்டப்பட்டது. 250 இயந்திரப்படகுகளுக்கான வசதிகள் மட்டுமே இத்துறையில் இருந்தபோதும் சுமார் 350 படகுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிடிக்கின்ற மீன்களை சந்தைப்படுத்தும் வசதிகள் கூட இன்னும் மீன் பிடி அமைச்சினால் செய்யப்படவில்லை என்றும் எடுத்துக் கூறினர். துறைமுக கூட்டுத்தாபனம் மீனவர்களுக்கு புதிய மீன் பிடி முறைகள் பற்றிய பயிற்சிகளை வழங்க வேண்டியிருக்கின்றது.

முடிவாக,

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை (SL PA) மேலும் தாமதிக்காமல் வர்த்தக துறைமுகப் பிரிவினை உடன் செயற்பாட்டுக்குட்படுத்த வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமது காணிகளை துறைமுக திட்டத்திற்கு நன் நோக்குடன் வழங்கி அவற்றுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை இன்னும் முழுமையாக பெறாத நிலையில் தமது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையும் மக்கள் இழந்து நிற்கின்றனர். தேர்தல் காலத்தில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட சமீபத்தில் விஜயம் செய்த புதிய துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் இத்துறை முகம் மிகவிரைவில் தொழிற்படத் தொடங்கும் என்ற உறுதியினை அளித்திருக்கின்றனர். தேசிய பொருளாதாரத்திலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்திலும் இத்துறைமுகத்தின் முழு அளவிலான செயற்பாடு மைற்கல்லாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நடை முறை நிலைமைகளை விரிவாக அவதானித்து அறிந்து கொண்ட இணைப்புச் செயலாளர் ஜனாப். பளீல் துறைமுகத்தை அதன் முழுக் கொள்ளளவில் இயங்க வைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தும் அறிக்கை ஒன்றினை கௌரவ கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களுக்கும், தேசியத்தலைவரும் மாண்புமிகு அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் சமர்ப்பிக்கப் போவதாக செயலாளர் உறுதியளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -