சலீம் றமீஸ்-
ஆரம்ப காலத்தில் கல்வித்துறையில் பௌதீக வளங்கள் இல்லாத சூழ் நிலையிலும்; தியாக மனப்பாங்கில் செயல் பட்டு நமது சமூகத்தின் கல்விச் செயற் பாடுகளுக்கு பாரிய பங்கினை வகித்து இன்று பல துறைகளிலும் உயர் நிலையை அடையக் கூடியவர்களை உருவாக்கி வரலாறு படைத்துள்ள நமது கல்வியாளர்களை நாம் என்றும் மறந்து விட முடியாமல் உள்ளது என அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக, அதிபர்களாக, விரிவுரையாளர்களாக கடமை புரிந்து ஓய்வு பெற்றுள்ள கல்வியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று அட்டாளைச்சேனை கல்வி வட்டத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.றசீட் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சரும், மாகாண சபை உறுப்பனருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் எந்த ஒரு பதவியாளர்களுக்கும் இல்லாத கௌரவம் கல்வியாளர்களுக்கு நமது சமூகத்தில் எப்போதும் உள்ளது. நமது பிரதேசத்தில் கல்விப் பணிப்பாளர்களாக, விரிவுரையாளர்களாக, அதிபர்களாக கடமை புரிந்து ஓய்வு பெற்ற கல்வியாளர்களுக்கு அட்டாளைச்சேனை கல்வி வட்டம் பாராட்டி கௌரவிக்க எடுத்த நடவடிக்கைகளை நமது மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்.
கல்வியலாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்திலும் நடை பெற்று தற்போது தியாக மனப்பாங்குடன் செயற்பட்டு வரும் நமது கல்வியியலாளர்களை கௌரவிக்கும் சம்பிரதாயம் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் நமது முன்னோர்கள் உலமாக்களாக, சட்டத்தரணிகளாக, வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக கலாசாலையிருந்து பட்டங்களை பெற்று நமது ஊர்களுக்கு வரும் போது நம் முன்னோர்கள் ஒன்று கூடி அவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. அந்த நிகழ்வுகள் இன்னும் எம் மனதில் மறையாமல் உள்ளது. தற்போதைய காலத்தில் இவ்வாறான பாரம்பரிய நிகழ்வுகள் மங்கிப் போய்விட்டன. இன்று நமது பிரதேசங்களில் உள்ள எல்லா ஊர்களிலும் பட்டங்களைப் பெற்றவர்கள், கல்வியியலாளர்கள் பெருந் தொகையானோர்கள் உள்ள போதும் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் நடை பெறாமல் இருப்பது எமது சமூகத்தின் பெரிய குறைபாடாக காணப்படுகிறது.
எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை கல்வி வட்டத்தினர் எமது பிரதேசங்களில் உள்ள சகல பாடசாலைகளினதும் கல்வி வளர்ச்சியிலும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்க வேண்டும். நாம் இந்த உலகில் எந்தப் பதவியில் இருந்தாலும், நாம் பிறந்த மண்ணில் வாழும்; மக்களின் கல்வி, கலாச்சார, பொருளாதார அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் போதுதான் எமக்கு நிம்மதி கிடைக்கும். கல்வி வட்டத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு எங்களால் இயன்றளவு உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
நமது பிரதேசத்தில் கல்வி வளர்ச்சிக்காக எமது தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா MP அவர்களும் நானும் இணைந்து எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கப் பெற்ற காலம் எல்லாம் கல்வி வளர்ச்சிக்காக முடிந்தளவு பணிகளைப் புரிந்துள்ளோம்.
அவைகளுக்கு இங்குள்ள கல்வியாளர்களே சாட்சியாக உள்ளனர். கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை அமைச்சராக கடந்த ஆறரை வருடங்களாக பதவி புரிந்து விட்டு முன்னாள் அமைச்சர் என்ற வகையில் எனது ஆசான்களை கௌரவிக்கும் வரலாற்று நிகழ்வில் முதலாவது கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக மக்கள் நன்மைகளைப் பெறக் கூடிய வகையில் பயன்படுத்தியுள்ளோம். என்பதனை என்னும்போதே மணதிற்கு திருப்தியாக உள்ளது. முடிந்தளவு வரலாற்று சமாதானத்திற்காகவும், அபிவிருத்திப்பனிக்காவும் இன ஒற்றுமைக்காகவும் கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டுள்ளோம்.
நான் அமைச்சராக பதவி வகித் காலத்தில் தேர்தல்கள் பல நடை பெற்றன. தேர்தல்கள் முடிந்தவுடன் எனது கட்சிக்காரர்கள் நமது பிரதேசத்திற்கு இனி எவ்விதமான அபிவிருத்திப்பணிகளும் செய்யக் கூடாது என ஆவேசத்துடன் என்னிடம் வந்து வேண்டுகோள் விடுத்தார்கள். நான் பொறுமையாக இருந்து எனது கட்சிக்காரர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்த நிலையில் இப்பிரதேச மக்களின் அபிவிருத்திப்பணிகளை நிறுத்தாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தேன்.
இன்று முன்னாள் அமைச்சராகிவிட்ட நிலமையில் இப்பிரதேசத்தில் நமது மக்களுக்காக செய்யப்பட்ட வரலாற்று அபிவிருத்திப்பணிகள் மாத்திரம் எம் மத்தியில் இன்று அடையாளமாக மிளிர்வதுடன் மக்களோடு மக்களாக வாழும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது,நீண்ட காலத்திற்குப் பிறகு நமது மண்ணுக்கு சகோதர கிராம மக்களின் பூரண ஒத்துழைப்பின் ஊடாக பொத்துவில் தொகுதி முதல்வராக மர்ஹூம் DR.எம்.ஏ.எம்.ஜலால்தீன் MP தெரிவாகினார். பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார்.
குறுகிய காலத்திற்குள் நமது மண்ணைச் சேர்ந்தவர்களே மர்ஹூம் DR.எம்.ஏ.எம்.ஜலால்தீன் MP யின் பதவியை இல்லாமல் செய்தனர். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நமது மண்ணுக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா MP அவர்களினாலும், தேசிய காங்கிரஸின் வாக்கு வங்கியினாலும் சென்ற 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் பதவியினை நமது மண்ணைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சில பிரதேச வாத சிந்தனையாளர்களும் இணைந்து இல்லாமல் செய்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் தங்களின் பிரதேசத்திற்கு ஒரு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பல ஊர்களிலும் இருந்து பஸ் வண்டிகளில் பொது மக்கள் கொழும்புக்கு சென்று கோரிக்கை விடுத்த நிலமையில் அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் நமது பிரதேசத்தில் இருந்த அமைச்சுப் பதவியை இல்லாமல் செய்ய கொழும்புக்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
100 நாள் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் 420 மில்லியன் நிதியில் அபிவிருத்திப் பணிகள் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க உள்ளோம். நமது மக்கள் அரசியல்வாதிகள் குறித்து ஒப்பிட்டுப் பார்க்கும் புதிய காலம் தற்போது உருவாகி உள்ளது.
நமது நாட்டின் அரசியல் நிலமை எதிர் காலத்தில் எவ்வாறு அமையும் என்பதனை தீர்மாணிக்கமுடியாத புதிய நிலமை ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி 06 வருடங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சி பெற்றுள்ள நிலமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் உள்ளது. சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்பட்டு வருகின்றனர். 100 நாள் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கூறப்பட்ட நிலமையில் தற்போது தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.
பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்பட்டு அதிகப்படியான ஆசனங்களைப் பெறும் கட்சி சார்பில் பிரதமர், அமைச்சரவை தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியுடன் இணைந்து நிலையான ஆட்சியினை ஆறு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தும் நிலமை உருவாகும் போது தான் நாம் பாரியளவில் அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டார்.
.jpg)