62-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!


தேசிய திரைப்பட விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த திரைப்படமாக சைத்தன்யா தாம்ஹனே இயக்கத்தில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'கோர்ட்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது கன்னட நடிகர் விஜய்க்கு (நானு அவனல்ல அவளு - கன்னடம்) கிடைத்துள்ளது. சிறந்த நடிகையாக கங்கனா ரணாவத் (குயின்-ஹிந்தி திரைப்படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கங்கனா ரணாவத் ஏற்கெனவே சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை கடந்த 2008-இல் பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த குழந்தை நட்சத்திர விருதுக்கு 'காக்கா முட்டை' தமிழ் திரைப்படத்தில் நடித்த விக்னேஷ்,ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படங்களாக 'காக்கா முட்டை', மராத்தியில் வெளியான 'எலிசபெத் ஏகாதெசி' ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

சிறந்த பாடலாசிரியராக நா.முத்துகுமாரும் (சைவம்), சிறந்த பின்னணிப் பாடகியாக உத்தாரா உன்னிகிருஷ்ணனும் (சைவம்), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த படத்தொகுப்பாளர் விருது விவேக் ஹர்ஷனுக்கு (ஜிகர்தண்டா) கிடைத்துள்ளது.

பிராந்திய மொழி படங்கள் வரிசையில் சிறந்த தமிழ் திரைப்படமாக 'குற்றம் கடிதல்' தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்தி படமாக 'குயின்', கன்னடத்தில் 'ஹரிவு', மலையாளத்தில் 'அய்ன்' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த இயக்குநருக்கான விருது வங்காள மொழி இயக்குநரான ஸ்ரீஜித் முகர்ஜிக்கு (சோட்டுஸ்கோனே - வங்கமொழி திரைப்படம்) கிடைத்துள்ளது.

சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக 'சொட்டோடேர் சோபி' (வங்க மொழி), சுற்றுச்சூழலை வலியுறுத்தும் சிறந்த திரைப்படமாக 'ஒட்டால்' (மலையாளம்) ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விஷால் பரத்வாஜுக்கு (ஹைதர் - ஹிந்தி) கிடைத்துள்ளது.

திரைப்படம் சார்ந்த சிறந்த புத்தகத்துக்கான தேசிய விருது, படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான தனஞ்செயன் எழுதிய 'ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா' புத்தகத்துக்கு கிடைத்துள்ளது.

'இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி'

தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
'தங்க மீன்கள்' படத்துக்காக நான் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான தேசிய விருது பட்டியலிலும் எனது பெயர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி. 'சைவம்' படத்தில் இடம் பெற்ற 'அழகே அழகு...' பாடல் வாழ்வின் சில உன்னத விஷயங்களை சொல்லியிருக்கும். அந்தப் பாடலுக்கான சூழலை உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இந்த விருது அமையும். தொடர்ந்து தரப்படும் இந்த மாதிரியான அங்கீகாரங்கள் எனது பொறுப்புகளை அதிகமாக்கியுள்ளன என்றார் நா.முத்துக்குமார்.

'தமிழ் சினிமாவுக்கு சமர்ப்பணம்'

'பிரைடு ஆஃப் தமிழ் சினிமா' புத்தகத்துக்கான தேசிய விருதை தமிழ் சினிமாவுக்கு சமர்ப்பணம் செய்வதாக படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான தனஞ்செயன் தெரிவித்தார்.

இதுகுறித்து  அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
83 ஆண்டுகால தமிழ் சினிமாவின் பெருமைகளையும் அதன் சாதனைகளையும் தாங்கிப் பிடித்த புத்தகத்துக்கு தேசிய விருது என்கிற அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. பல ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த பரிசாக இந்த விருதை கருதுகிறேன். பட்ட கஷ்டங்கள் எல்லாம் இந்த ஒரு நொடியில் பறந்து போய் விட்டன. புத்தகம் உருவாகும் வரை எனக்குத் தோள் கொடுத்த மனைவி லலிதாவுக்கும் உறுதுணையாய் இருந்த மகள் ஹரிதாவுக்கும் என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொடுக்கிறேன். புத்தக வடிவமைப்பு குழுவுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு மொழி சினிமாவைப் பற்றியும் இது போன்றதொரு தெளிவான பார்வையை எந்தப் புத்தகமும் கொடுத்ததில்லை. அந்த வகையில் இது சிறப்பு பெறுகிறது என நினைக்கிறேன். 

இந்த அங்கீகாரம் இந்திய வரலாற்றில் தமிழ் சினிமாவுக்கான முக்கிய இடமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்றார் தனஞ்செயன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -