த.நவோஜ்,ந.குகதர்சன்-
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை திங்கள் கிழமையும் 15 ஆவது நாட்களாக மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது தொழிலாளர்கள் சிலர் காகித ஆலையின் கூரையின் மேல் ஏறி நின்றும் ஆலையின் முகாமைத்துவ நிர்வாகப் பணிகள் முற்றாக இயங்காத படி நிர்வாகப் பிரிவுளின் கதவுகளை பூட்டியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5 மாத நிலுவைப் பணத்தினை வழங்குமாறு கோரியே கடந்த 15 நாட்களாக கொழும்பு வாழைச்சேனை வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை திங்கள் கிழமையன்று தொலை நகல் ஒன்று கொழும்பு காகித ஆலையின் தலைமையகத்திலிருந்து அதன் தவிசாளரினால் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் 31ஆம் திகதியன்று பேச்சு வார்த்தை ஒன்றினை மேற்கொள்ளும் முகமாக ஆலையின் முகாமையாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் கொழும்பு தலைமையத்திற்கு வருமாறு தெரிவித்து அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேற்படி தகவல் அறிந்த தொழிலாளர்கள் தங்களது நிலுவைப் பணம் கிடைத்த பின்பே மேலதிக பேச்சுவார்த்தைக்கு சமூகமளிப்பதாக கூறி குறித்த தொலை நகலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேவேளை செவ்வாய்கிழமை தொழிற்சங்க பிரதி நிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை சந்தித்து பேச்சுவார்தையொன்றினை மேற்கொள்ளும் முகமாக ஜக்கிய தேசிய கட்சியின் தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளதாக காகித ஆலையின் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
