ஊடக பிரிவு-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதமாகிறது. இலங்கையில் நல்லாட்சி ஒன்று மலர வேண்டுமென்று முஸ்லிம்கள் இறையச்சம் மேலோங்க நோன்பு நோற்று, தஹஜ்ஜதில் மன்றாடியதன் பலாபலனே இன்று சாத்தியமாகியிருக்கும் மைத்திரி யுகமாகும்.
மஹிந்தவின் தோல்வியில் என்றுமில்லாதவாறு 98 வீதத்திற்கும் அதிகமாக வாக்களித்து ஆட்சிமாற்றத்திற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்பதை முன்னைய ஆட்சியின் அமைச்சர்கள், பெரும்பான்மை சிரேஷ்ட அரசியல்வாதிகள், அரசியல் அவதானிகள் அண்மைக்காலங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மஹிந்தவின் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பிரதான காரணி என்ன? சுற்றி வளைக்காமல் சொல்லப் போனால் இனவாதம் ஆகும். மற்றது, இனவாதம் தலை தூக்க கடந்த அரசு துணை போகும் செயற்பாடுகளில் இறங்கியமையாகும். குறிப்பாக பேருவளை-தர்ஹா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா எனும் கடும்போக்கு அமைப்பு முன்னெடுத்த வன்முறைகளின் போது கடந்த அரசாங்கம் நடந்து கொண்ட விதம் முஸ்லிம்கள் மத்தியில் மஹிந்தவின் மீது பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நல்லாட்சி எனும் கோஷத்துடன் எம் முன் வாக்குக் கேட்டு வந்த போது, மஹிந்தவின் மீது இருந்த வெறுப்பு ஜனாதிபதி மைத்திரி மீது மிகுந்த அபிமானத்தை ஏற்படுத்தியது. அது அபிமானம் என்பதை விட கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளுக்கு உடனடி நியாயம் கிடைக்கும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதலாம்.
குறிப்பாக,பேருவளை-தர்ஹா நகர் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக நாடு பூராகவும் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது கோபக் கணைகளை வாக்குகளாக மாற்றி, கடந்த ஆட்சியின் மீதிருந்த வெறுப்பை காடினர். அதற்கேற்றால் போல, அன்று பிரச்சாரம் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள் வழங்கப்படுமென மேடைகளில் முழங்கினார்கள்.
ஆனால், இன்று வினைத்திறன் மிக்க ஒரு நல்லாட்சி நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்- முஸ்லிம் அரசியல்வாதிகள் எதை மூலதனமாக்கி அன்று வாக்கு கேட்டார்களோ அந்த விடயம் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மத்தியில் பேசு பொருளானது பேருவளை-தர்ஹா நகர் பேரவலமாகும். ஆனால், இன்று அந்தப் பேரவலம் பற்றி யாரும் பேசுவதாயில்லை.
நல்லாட்சி மலர்ந்து இன்றுடன் முப்பது நாள் பூர்த்தியாகியிருக்கிறது. அட்டூழியம் செய்தவர்கள் சுதந்திரமாக உலாவுகிறார்கள்.பழைய படி இனவாதம் கக்குகிறார்கள். அவர்களுக்கு எதிரான உருப்படியான எவ்வித சட்ட நகர்வுகளையும் எமக்கான முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை மேற்கொள்ளவில்லையென்பது மன வருத்தமான விடயமாகும்.
தர்ஹா நகரில் படுகொலை செய்யப்பட்ட அந்த இரண்டு சகோதரர்களின் உறவுகளுக்கும் ஏன் இந்த நல்லாட்சியில் நீதி வழங்க சுணக்கம் ஏற்படுகிறது? சுணக்கம் ஏற்படுகிறதா? ஏற்படுத்தப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எமக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்பதை இவ்வேளையில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நல்லாட்சியில் சின்னச் சின்ன குற்றங்கள் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது பாரிய குற்றங்கள் புரிந்த கடும்போக்குவாதிகளையும், அதன் அமைப்புகளையும் இவ்வரசு ஏன் கண்டு காணாமல் விட்டு வைத்திருக்கிறது?
முஸ்லிம்களிடத்தில் இந்தச் சந்தேகம் வலுப்பெற்றிருக்கும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இவ்வாறான இனவாதச் செயல்களை ஊக்குவித்து வெறியாட்டம் ஆடியவர்களை உடனடியாக இனம் கண்டு கூண்டில் ஏற்றி தர்மத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்.
