வரவு செலவு திட்டத்தினூடாக 50 ஆயிரம் வீட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் 100 நாட்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அடித்தளம் இடுவேன் என்று உறுதியளித்த வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சின் திட்டங்களை ஊழல் மோசடிகளற்ற முறையில் முன்னெடுத்து நல்லாட்சியை உறுதிப்படுத்துவேன். மேலும் மைத்திரி ரணில் ஆட்சியில் பல வரலாற்று மாற்றங்களை நூறு நாட்களில் ஏற்படுத்துவோம் எனவும் அவர் கூறினார்.
ஒரு இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் கட்டிட நிர்மாண துறை சார்ந்த பொறியியலாளரை சந்தித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் கீழ் 100 நாட்களில் வரலாற்று ரீதியிலான பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இதனூடாக மக்கள் சேவைக்கு வழி சமைப்போம். நல்லாட்சி தொடர்பிலேயே அதிகளவில் தேர்தல் மேடைகளில் திட்டித்தீர்த்தோம். இந்நிலையில் குறித்த நல்லாட்சி பயணத்தை வீடமைப்பு அமைச்சினூடாக நாம் ஆரம்பித்துள்ளோம்.
தனக்கென அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் சம்பளம் வீடு வாகனம் அனைத்தையும் வீட்டு திட்டத்திற்கு வழங்கி நல்லாட்சி பயணத்தை ஆரம்பித்துள்ளேன். முன்னைய ஆட்சியின் போது ஊழல் மோசடி அதிகரித்த வண்ணம் காணப்பட்டது. முன்னைய அமைச்சருடன் எவ்வித கோபதாபங்களோ எனக்கு இல்லை. பழிவாங்கல் அரசியலும் எம்மிடமில்லை.
ஊழல் மோசடிகளை நீக்கி சிறந்த மக்கள் சேவையினை வழங்குவதே எமது நோக்கமாகும்.
இதேவேளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தினூடாக 50 ஆயிரம் வீட்டு திட்டத்திற்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் 100 நாட்களுக்கு ஒரு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அதற்கான அடித்தளத்தை நான் இடுவேன்.
1970 ஆம் ஆண்டில் பீட்டர் கெனமன் 700 வீடுகளை நிர்மாணித்தார். 1977 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறிய ஐ.தே.க. ஆட்சியில் ரணசிங்க பிரேமதாஸ ஒரு இலட்சம் வீடுகளை வாக்குறுதி அளித்ததை போன்று மக்களிற்கு வழங்கினார்.
எனினும் 120000 வீடுகளை நிர்மாணித்து சாதனை படைத்தார். அது போன்றே தானும் ஒரு இலட்சம் வீட்டு திட்டத்தை நூறு நாட்களில் ஆரம்பிப்பேன். இதற்கான தனது பிரத்தியேக செயற்பாடுகளை உதறித்தள்ளி விட்டு செயற்பட்ட தயாராக உள்ளேன் என்றார்.
