முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பிய கடிதம்!

முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பிய கடிதம். 

அன்பின் தலைவர் அவர்களுக்கு,

மரண களத்தில் நின்று உயிர் தப்பியது போன்று இலங்கையின் ஜனநாயகம் தப்பிப் பிழைத்துள்ளது. அந்த ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் வெற்றி கொண்ட அணியின் முக்கியமான ஒருவராக இருந்த நீங்கள் இன்று சற்று வேலைப்பளு குறைந்தவராக இருப்பீர்கள் என்ற காரணத்தினால் கடிதம் மூலமாவது சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

புதிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியை பெற்றுள்ள உங்களுக்கு முதலில் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை பாரமெடுத்த கையுடன் இன்று நூறு நாட்களுக்குள் புதிய அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. நாட்டில் சகல இனங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் புதிய அரசியல் சீர்திருத்தம் அமையுமா? என்ற கேள்வியும் எழுகின்றது.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு ஒருவாரத்திற்கு முன்னர்தான் அதிலிருந்து வெளியேறியது. வெளியேறுவதற்கான முக்கியமான காரணமாக கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கைதான் இருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் பின்னடித்ததால் மாற்றுத் தரப்பிற்கு மாறி மைத்திபாலவிற்கு ஆதரவு வழங்கினீர்கள்.

கரையோர மாவட்டத்தை பெறுவதற்கான போராட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி முக்கிய பங்கு வகித்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் நீண்ட உரையை ஆற்றியதுடன் பெரும்பான்மையினருக்கு கரையோர மாவட்டத்தின் தேவைகளை விளங்கப்படுத்தினார். அதனைப் பெறுவதற்காக கட்சிக்கு அழுத்தங்களையும் கொடுத்தார்.

அந்த வகையில் கரையோர மாவட்டக் கோரிக்கையை பிரதானமாக முன்னடுத்தவர்கள் ஹஸன் அலியும், ஹரிசும்தான் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். இப்போதும் அதனைப் பெறுவதற்கான போராட்டத்தில் இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் களமிறங்குவது அவர்களது கடமையாகும் என நினைக்கின்றோம்.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். புதிய அரசியல் சீர்திருத்தத்தில் இவர்களின் பங்கு மிக முக்கியமாகும்.

நமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கம் மக்களின் உரிமைகளையும்,நலன்களையும் அரசியல் யாப்பில் உள்ளீர்ப்பதற்கான சரியான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. அதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் நீங்களும் சரியான முறையில் பயன்படுத்துவீர்கள் என திடமாக நம்புகின்றோம்.

தேர்தல் வந்தால் மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்டத்தை தூக்கிப் பிடிக்கும். தேர்தல் முடிந்து பதவிகளைப் பெற்றதும் அதனை மறைத்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மேடைகளில் இம்முறை முழங்கினார்கள். நாங்களும் அதனை புதிய சீர்திருத்தத்தில் உள்ளடக்க முயற்சிக்கவில்லையாயின் அவர்களது கருத்துக்கள் உண்மையாகிவிடும்.

அரசியல் சீர்திருத்தத்தில் எதனை கைவிட்டு எதனைச் சேர்க்கலாம் என்பதை அரசியல் கட்சிகள் ஆராய்ந்து வருகின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் கல்முனை கரையோர மாவட்டத்தைப் பற்றி எதனையும் கூறாமல் அதனை குப்பைக் கூடையில் போட்டுள்ளதா? என்ற பேச்சு இன்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

கரையோர மாவட்டத்தைப்பற்றி பேசுவதற்கும் அதனை உருவாக்குவதற்கும் இதுதான் சரியான தருணம் என்பது நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயற்படுகின்ற ஒரு நிலையில் அந்தக் குழுவில் கதைத்து அதற்கு எதிரான விடயங்களை அவர்களுக்கு நியாயமாக விளங்கப்படுத்தலாம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலை இருக்கத்தக்க சந்தர்ப்பத்தில் கரையோர மாவட்டத்தைப் பற்றிய முன்னடுப்புக்கள் அடங்கிப் போனதாக நாங்கள் பார்க்கின்றோம். பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரபின் கனவான கரையோர மாவட்டத்தைப் பெறுவதுதான் முஸ்லிம் காங்கிரஸின் இலட்சியமாகும் என்று நடந்து முடிந்த தேர்தலில் மேடைகளிலும்,ஊடகங்களிலும் பிரசித்தமானது.

எனவே, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நமது கட்சியும் நீங்களும் மக்களுக்குக் கொடுத்த வாக்குரிதியை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றுத்தருமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

பி.எம்.நிசாம்
தேசிய அமைப்பாளர்
முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -